”பெரியார் பேசியதை எல்லாம் இப்போது பேசினால் அது மக்களுக்கு அருவருப்பைத் தரும்” – அண்ணாமலை

0
26

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

பல்லடம் அருகே சேமலைக்கவுண்டன்பாளையத்தில் தந்தை, தாய், மகன் ஆகியோர் கடந்த நவம்பர் மாதம் கொலை செய்யப்பட்டனர். 42 நாட்களாகியும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை என்று கூறி, திருப்பூர் மாவட்டம் கொடுவாயில் நேற்று பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை வகித்து மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: இந்த கொலைக்கு நீதி கிடைக்கவில்லையென்றால், எதற்காக பொதுவாழ்க்கையில் ஈடுபட வேண்டும். இப்பகுதியைச் சேர்ந்த 50 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெற்று, தமிழக ஆளுநரிடம் அளித்து, குற்றவாளியை கண்டுபிடிக்குமாறு வலியுறுத்துவோம். அவர்களை நாங்கள் நிச்சயம் வேட்டையாடப் போகிறோம். உள்துறை அமைச்சரை சந்தித்து, புலனாய்வில் கைதேர்ந்த அதிகாரிகளைக் கொண்டு இக்கொலை வழக்கை விசாரிக்குமாறும் வலியுறுத்துவோம். இந்த வழக்கை தமிழக அரசு, சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக காவல் உதவி ஆய்வாளர், காவலர் தேர்வு நடத்தப்படவில்லை. காலி பணியிடங்கள் ஆண்டுதோறும் அதிகரிக்கும்போது, குற்றங்களை எப்படிக் கண்டறிந்து, தடுக்க முடியும்? அண்ணா பல்கலை. சம்பவத்தை கண்டித்து நான் சாட்டையால் அடித்துக் கொண்டேன். இங்கு சிஸ்டம் தோற்றுவிட்டது. `யார் அந்த சார்’ என்ற வாசகம் அடங்கிய டீ-சர்ட்டுடன்தான் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

கோவை விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறும்போது, டங்ஸ்டன் சுரங்கத்தை மத்திய அரசு செயல்படுத்தாது என்று தெரிவித்த பின்னரும், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை. அண்ணா பல்கலை. சம்பவத்தில் கைதான ஞானசேகரன் திமுகவில் இல்லை என்று அக்கட்சித் தலைவர்கள் கூறினர். முதல்வர் ஸ்டாலின் பேரவையில், ஞானசேகரன் கட்சியின் அனுதாபி என்று கூறி, பழியிலிருந்து தப்ப முயல்கிறார். தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், காவல் ஆய்வாளர் மீது எந்த தவறும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சிறப்பு புலனாய்வுப் பிரிவு காவல் அதிகாரியை கைது செய்துள்ளது. பெரியார் பேசியதை எல்லாம் இப்போது பேசினால், அது மக்களுக்கு அருவருப்பைத் தரும். சீமானிடம் போலீஸார் விசாரணை நடத்தினால், பெரியார் பேசியது தொடர்பான ஆவணங்களை வழங்க நான் தயாராக உள்ளேன்.

கோவையில் சாலையோர உணவகத்தில் மாட்டு இறைச்சி விற்பனை தொடர்பாக பாஜகவைச் சேர்ந்தவர் பேசிய முழு வீடியோவை வெளியிடாமல், மாட்டு இறைச்சி குறித்து அவர் பேசிய ஒரு நிமிட வீடியோவை மட்டுமே வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு பாஜக சார்பில் காவல் துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. கோயில் அருகே மாட்டிறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகள் விற்பனை செய்ய வேண்டாம் என்பதே பாஜக தொண்டரின் நிலைப்பாடாக இருந்தது. யுஜிசி விவகாரத்தைப் பொறுத்தவரை, பிப். 5-ம் தேதி வரை கருத்துக்களை அனுப்ப மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here