காஷ்மீரில் 1999-ம் ஆண்டு மே மாதம் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தினரை இந்திய ராணுவம் விரட்டி அடித்தது. இந்த வெற்றியை கொண்டாடும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கார்கில் வெற்றி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கார்கில் போரில் வீர மரணம் அடைந்த 527 வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. கார்கில் போரின் 27-ம் ஆண்டு வெற்றி தின நிகழ்ச்சி லடாக்கின் கார்கில் போர் நினைவிடத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: “எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறினால், இந்தியாவின் பதிலடி கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். இந்தியாவின் நோக்கம் தெளிவாக உள்ளது. பாகிஸ்தானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இருக்காது. பேச்சுவார்த்தை என்று ஒன்று நடந்தால், அது பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியதாக மட்டுமே இருக்கும். தற்போது, தீவிரவாதம் என்பதை பாகிஸ்தான் அரசு தனது கொள்கையின் ஒரு பகுதியாக மாற்றிவிட்டது. அங்கு ராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே வேறுபாடு இல்லை.
பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாத அமைப்புகளைப் பாதுகாப்பது மட்டுமின்றி, அவர்களுடன் இணைந்து நெருக்கமாகவும் செயல்படுகிறது. எனவே, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது, தீவிரவாதிகளையும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் அரசுகளையும் இந்தியா இனி தனித்தனியாகப் பார்க்காது என்பதை நாங்கள் தெளிவுபடுத்தினோம். வீரர்களின் தியாகத்தை இந்தியா கொண்டாடும் அதே வேளையில், எல்லை தாண்டிய ஊடுருவல் போன்ற தொடர் அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாடு விழிப்புடன் இருக்க வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.
அவர் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில், “கார்கில் வெற்றி தினத்தில், தாய் நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு எனது ஆழ்ந்த மரியாதையைச் செலுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.
