ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ச்சியாக 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது ஆர்சிபி அணி. 156 ரன்கள் இலக்கை துரத்திய ஆர்சிபி அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றிகண்டது.
37 வயதான விராட் கோலி 42 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இந்தத் தொடரில் விராட் கோலி ஒட்டு மொத்தமாக 16 ஆட்டங்களில் விளையாடி 165.84 ஸ்டிரைக் ரேட்டுடன் 675 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலி 4-வது இடம் பிடித்தார். அவரது ரன் வேட்டையில் ஒரு சதம், 5 அரை சதங்கள் அடங்கும்.
ஆட்ட நாயகன் விருது வென்ற விராட் கோலி கூறியதாவது: வெற்றிக்கான கடைசி ரன்களை அடிக்க வேண்டும் என்பது கனவில் மட்டுமே சாத்தியமாகக்கூடிய ஒன்று. இந்தத் தருணத்தைப் பற்றி நான் பலமுறை யோசித்திருக்கிறேன், வெற்றிக்கான அந்த கடைசி ரன்னை நாம் அடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் உங்களை இன்னும் சிறப்பாக செயல் பட தூண்டும் அளவிற்கு கடுமையான போட்டி நிலவுகிறது. நான் என் ஆட்டத்தை மாற்றாமல், மனநிலையைத்தான் மாற்ற வேண்டியிருந்தது. பந்துவீச்சாளர்களைத் துணிச்சலாக எதிர்கொண்டு கூடுதல் ரன்களைக் குவிக்க வேண்டியிருந்தது.
எங்கள் அணி இனிமேல் தனிப்பட்ட வீரரை மட்டும் நம்பி இருக்க வேண்டியது இல்லை. நாங்கள் இதற்காக மிக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. இப்போது மைதானத்தில் களம் இறங்கும்போது, ஒவ்வொரு முறையும் நாமே முன்னின்று அணியைக் காப்பாற்ற வேண்டியதில்லை என்ற நிம்மதியைத் தரும் சிறந்த வீரர்கள் குழு எங்களிடம் இருக்கிறது. எனக்கு பின்னாலும், என்னை சுற்றிலும் போட்டிகளை வென்று கொடுக்கக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள்.
இந்த சீசனில் எங்களது அணியில் பலருக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்துள்ளது. ஜோஷ் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார், ஜேக்கப் டஃபி, கிருணல் பாண்டியா ஆகியோரின் பந்து வீச்சு உலகத்தரம் வாய்ந்தது. இவர்களை நீங்கள் முழுமையாக நம்பலாம். இவர்களுடன் இணைந்து இந்த சீசனில் ரஷிக் சலாம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டார். மைதானத்திற்குள் வரும்போது நான் மிகவும் நிதானமாக உணர்ந்தேன். எங்களிடம் உள்ள அணி, எத்தகைய சூழ்நிலையையும் கையாண்டு வெற்றியை நோக்கி நகர்வதற்கான நம்பிக்கையைத் தருகிறது.
இலக்கைத் துரத்தும்போது என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தது. லீக் சுற்றில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பதே எங்களது முதல் இலக்காக இருந்தது. அதற்குப் பிறகு எங்களுக்கு முன்னால் எந்த அணி இருக்கிறது என்பதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் எதிரணிகளுக்கு மதிப்பளிக்கிறோம், யாரையும் வம்புக்கு இழுப்பது இல்லை. எங்களிடம் முதிர்ச்சியடைந்த தொழில்முறை வீரர்கள் உள்ளனர். அவர்களின் அனுபவம் ஆட்டத்தில் தெளிவாகத் தெரிகிறது. முக்கியமான சூழ்நிலையில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் முன்னின்று பொறுப்பேற்க வேண்டும்.
இறுதிப் போட்டியில் சேஸிங் என்பதால் என்னை விரைவாக ஆட்டமிழக்க செய்ய பார்ப்பார்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் 3-4 ஓவர்கள் மீதமிருக்கும்போதே இந்த இலக்கை அடையக்கூடிய சாம்பியன் அணி எங்களிடம் இருக்கிறது. கடந்த ஆண்டு நாங்கள் வெற்றி பெற்றபோது, ‘இது முடிவு அல்ல, நாம் அடுத்தடுத்து சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும்’ என எங்களது அணியின் இயக்குநர் மோ போபாட் கூறினார். ரன் சேஸிங்கின் தொடக்கத்தில், பவர்பிளே ஓவர்களிலேயே ஆட்டத்தை வசப்படுத்த வேண்டும் என்று வெங்கடேஷ் ஐயரிடம் கூறினேன்.
அந்த வகையில், எங்களிடம் முழுமையான தெளிவு இருந்தது. பேட்ஸ்மேன்கள் அனைவரும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கினர். சரியான சமநிலை மற்றும் அனைத்து துறைகளிலும் வலுவாக விளங்கும் அணியில் விளையாடுவதை மிகவும் மகிழ்ச்சியாகக் கருதுகிறேன். அதனால்தான் இப்போது மைதானத்தில் எங்களால் இவ்வளவு நம்பிக்கையோடு செயல்பட முடிகிறது.
கடந்த ஆண்டைப் போல இந்த முறை அவ்வளவு அழுத்தம் இருப்பதாகத் தெரியவில்லை என்றும், நமது வீரர்களின் திறமை என்ன என்பது நமக்கு நன்றாகவே தெரியும் என்றும் நான் சில வீரர்களிடம் கூறினேன். மேலும் இயல்பான ஆட்டத்தை விளையாடி, நமது திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தினால் இந்தத் தொடரிலேயே நாம்தான் சிறந்த அணி என்று எங்களுக்குள் பேசினோம். இதுவரை நாங்கள் சிறப்பாகச் செயல் பட்டதற்கு அதுவே காரணம். எங்களிடம் உள்ள திறமை, முதிர்ச்சி மற்றும் வீரர்களின் நிதானம் ஆகியவை இறுதிப் போட்டியில் மீண்டும் தெளிவாகத் தெரிந்தது. இவ்வாறு விராட் கோலி கூறினார்.
