ஹங்கேரிய எழுத்தாளர் லஸ்லோ கிரஸ்னாகோர்காய்க்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நான்காவதாக இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஹங்கேரியன் எழுத்தாளர் லஸ்லோ கிரஸ்னாகோர்காய் வென்றுள்ளார்.
இவர் ஹங்கேரியில் கடந்த 1954-ம் ஆண்டு பிறந்தார். இவரது முதல் நாவல் ‘சாட்டன்டாங்கோ’ கடந்த 1985-ம் ஆண்டு வெளியானது. இவர் எழுதிய ‘ஸ்பேட்வொர்க் பார் ஏ பேலஸ்: என்ட்ரிங் தி மேட்னஸ் ஆஃப் அதர்ஸ்’ என்ற சிறுகதையும் பிரபலம் அடைந்தது. இவரது படைப்புகள் அனைத்தும் தொலைநோக்கு கொண்டவை. தீவிரவாதம் அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில், இவரது படைப்புகள் கலையின் சக்தியை வெளிப்படுத்துகின்றன. இதற்காக இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாக நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.
மத்திய ஐரோப்பிய பாரம்பரியத்தில் வந்த மிகச் சிறந்த இதிகாச எழுத்தாளராக இவர் கருதப்படுகிறார். பிரபல எழுத்தாளர்கள் ஏனஸ்ட் ஹெமிங்கேவ, டோனிமாரிசன் ஆகியோர் அடங்கிய பட்டியலில் லஸ்லோ கிரஸ்னாகோர்காயும் இடம் பிடித்துள்ளார்.