மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்ற 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 223 ரன்கள் குவித்தது. தொடக்க பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா 30 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் விளாசி அசத்தினார்.
224 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங் 44 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் 3-வது டி20 போட்டியில் தன்னை வீழ்த்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி வகுத்த வியூகங்களை சமாளிக்க புதிய வழிகளைக் கண்டறிந்து விளையாடியதாக அபிஷேக் சர்மா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
மேற்கு இந்தியத் தீவுகள் அணி எனக்கு எதிராகத் திட்டமிட்டு வியூகம் வகுத்திருந்தது என்று உறுதியாகக் கூறமாட்டேன். ஆனால், அவர்கள் என்னை வீழ்த்துவதற்கான திட்டத்தைக் கொண்டிருந்தார்கள் என என்னுடைய மனதில் தோன்றியது.
எனக்கு எதிராக ஆஃப் ஸ்பின்னர் (ராஸ்டன் சேஸ்) பந்துவீசியது, அவருக்கும் எனக்கும் இடையிலான ஒரு போட்டியாகவே இருந்தது. இந்தத் தொடரில் அவர், சிறப்பாகப் பந்துவீசி வருவதால், முதல் ஓவரில் அவருக்கு உரிய மதிப்பளித்து விளையாடினேன். அதேநேரத்தில், நான் வகுத்த திட்டமும் எனக்கு நன்றாகக் கைகொடுத்தது.
பவர்பிளே ஓவர்களில் ரன்களை குவிக்க வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தினேன். ஆனால், என்னைக் கட்டுப்படுத்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஒரு திட்டத்தை வைத்திருந்தது. அந்தத் திட்டத்தை முறியடிக்கும் வகையில் நான் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டியிருந்தது.
நான் திட்டமிட்டு யோசித்துப் பார்த்து ஒவ்வொரு ஷாட்டையும் விளையாடுவது இல்லை. மைதானத்தில் பீல்டர்கள் எவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளனர் என்பதைப் பார்த்து அதற்கு தகுந்தவாறு இயல்பான ஷாட்களை விளையாடுகிறேன்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக விளையாடும் போது, ஆட்டம் இப்போது நம் பக்கம் வந்துவிட்டது என்று ஒருபோதும் உறுதியாகக் கூற முடியாது. ஏனெனில் 2-வது போட்டியில் இதை நாம் பார்த்தோம். அந்த அணியை பொறுத்தவரையில் களத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப, களமிறங்கும் எந்தவொரு பேட்ஸ்மேனாலும் மிக எளிதாக ஆட்டத்தைத் தங்கள் பக்கம் திருப்ப முடியும். எனவே, இந்த விஷயத்தை மனதில் வைத்தே நாங்கள் விளையாடினோம்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி மீண்டும் ஆட்டத்துக்குள் வருவதற்கு ஒரு சிறிய வாய்ப்பைக்கூட வழங்கக் கூடாது என்றும் முடிவு செய்தோம். ஷமர் ஸ்பிரிங்கர் பேட்டிங் செய்த விதம் என்னை உண்மையிலேயே ஆச்சரியப்படுத்தியது. அவர், விளையாடிய ஷாட்கள் எளிதானவை அல்ல. மேற்கு இந்தியத் தீவுகள் அணி 50 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தாலும் கூட நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆட்டத்தின் போக்கைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றும் திறன் அந்த அணிக்கு இருக்கிறது. இதை உணர்ந்தே, இந்த முறை நாங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் தயாராக இருந்தோம். இவ்வாறு அபிஷேக் சர்மா கூறினார்.
