Home உலக செய்திகள் நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டது எப்படி?

நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டது எப்படி?

0

சீன, நேபாள எல்லையில் இமயமலையின் லாங்டாங் லிருங் சிகரம் அமைந்துள்ளது. சுமார் 8,000 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த சிகரத்தில் பனிப்பாறைகள் உடைந்தன. இதனால் சிகரத்துக்கு உள்ளேயே மிகப்பெரிய ஏரி உருவாகி இருந்தது.

இந்த சூழலில் லாங்டாங் லிருங் சிகரத்தில் 2,000 அடி அகலம் கொண்ட பிரம்மாண்ட பனிமலை உடைந்து ஏரியில் விழுந்தது. இதன் காரணமாக ஏரி உடைந்து திபெத் பகுதியின் போய்கு நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுபோன்ற பெருவெள்ளம், பனிமலை ஏரி வெடிப்பு வெள்ளம் (ஜிஎல்ஒஎப்) என்றழைக்கப்படுகிறது.

திபெத்தின் போய்கு நதி நேபாளத்தில் போடே கோசி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. திபெத்தில் இருந்து சீறிப் பாய்ந்த வெள்ளம் நேபாளத்தின் போடேகோசி, திரிசூலி, நாராயணி நதிகளில் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் கடந்த புதன்கிழமை காலை நேபாளத்தின் ரசுவா, நுவாகோட் மாவட்டங்கள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கின. இரு மாவட்டங்களில் உள்ள 13 நீர் மின் நிலையங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

மேலும் நேபாளத்தின் நேத்ராவதி – ரசுவாகதி இடையிலான 42 கி.மீ. நீள சாலை, சியோப்ருபேசியில் உள்ள 16 கி.மீ. நீள சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக நேபாள நதிகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்ந்ததால் பேரழிவு ஏற்பட்டிருக்கிறது.

இதுகுறித்து அமெரிக்க அரசின் புவியியல் ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “இமயமலைப் பகுதியில் 4.4 ரிக்டர் அலகில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பனிமலைகள் உடைந்து நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கருதப்பட்டது. ஆனால் தீவிர ஆய்வில் அங்கு நிலநடுக்கம் ஏற்படவில்லை. பனிமலை உடைந்தே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நேபாள தலைநகர் காத்காண்டுவில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக புவியியல் ஆராய்ச்சியாளர் விஷால் நாத் கூறும்போது, “இமயமலைச் சிகரத்தில் சுமார் அரை கி.மீ. தொலைவு அகலம் கொண்ட பனிமலை உடைந்து சுமார் 20 மில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் சுனாமி அலையாக சீறிப் பாய்ந்திருக்கிறது.

பல அடி உயரத்துக்கு போடே கோசி, திரிசூலி நதிகளில் அலைகள் எழுந்துள்ளன. இது இமய மலையில் உருவான சுனாமி ஆகும். பருவநிலை மாறுபாட்டால் இதுபோன்ற இயற்கை பேரிடர்கள் நேரிடுகின்றன” என்று தெரிவித்தார்.

பனிமலை ஏரி வெடிப்பு வெள்ளம் (ஜிஎல்ஒஎப்) ஏற்பட்ட பகுதிக்கு சீன நிபுணர்கள் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தனர். பனிமலை ஏரி உடைந்த இடம், அங்கிருந்து நதியில் வெள்ளம் பாய்ந்த இடங்களை சீன நிபுணர்கள் முழுமையாக ஆய்வு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு அவசியம்

நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கனால் கூறுகையில், “சீனா, நேபாளம், இந்தியா மற்றும் பூடான் ஆகிய நாடுகள் சூழலியல் ரீதியாக இணைக்கப்பட்டுள்ளன. இமயமலைச் சூழலியலைப் பாதுகாப்பதில்தான் நமது கூட்டு வாழ்வும் எதிர்காலமும் இருக்கிறது. அரசியல் போட்டிகள் இருக்கலாம். ஆனால் காலநிலை மாற்றத்தால் மிக அதிகமாக பாதிக்கப்படும் பிராந்தியம் இமயமலைப் பகுதி என்பதால், நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version