Home மாநில செய்திகள் மெட்ரோ ரயில் பணிகளுக்காக மாதவரம் மில்க் காலனியை 4 மாதங்களில் காலி செய்து கொடுக்க உயர்...

மெட்ரோ ரயில் பணிகளுக்காக மாதவரம் மில்க் காலனியை 4 மாதங்களில் காலி செய்து கொடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

0

மெட்ரோ ரயில் பணிகளுக்காக சென்னை மாதவரம் மில்க் காலனியை 4 மாதங்களில் காலி செய்து கொடுக்க குடியிருப்பு வாசிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் ஆவின் பால் சப்ளை செய்வதற்காக மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் கடந்த 1959-ம் ஆண்டு மாட்டுக்கொட்டகை அமைக்க அரசு நிலம் ஒதுக்கிக் கொடுத்தது. அந்த நிலத்தின் அருகிலேயே மாடு வளர்ப்போர் தங்கிக்கொள்ள எம்.எம்.காலனி என்ற மாதவரம் மில்க் காலனி பகுதியும் உருவானது.

இந்நிலையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக எம்.எம். காலனி குடியிருப்பு வாசிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் எனக் கூறியுள்ள அரசு அதிகாரிகள், அந்த நிலத்தை காலி செய்து கொடுக்க உத்தரவிட்டுள்ளனர். அரசின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த லட்சுமி உள்ளிட்ட 3 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு, “மனுதாரர்கள் யாரும் ஆவின் நிறுவனத்துக்கு பால் விநியோகம் செய்வது இல்லை. மெட்ரோ பணிகளுக்கு அந்த நிலம் தேவைப்படுவதால் ஏற்கெனவே அந்த நிலத்துக்கான இழப்பீட்டை அரசிடமிருந்து பெற்றுவிட்டனர் என்பதால் அந்த குடியிருப்புகளுக்கு மனுதாரர்கள் எந்த உரிமையும் கோர முடியாது” என்றார்.

அதையடுத்து நீதிபதி, “அந்த நிலத்துக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை பெற்றுவிட்டு அதன்பிறகும் காலி செய்ய மறுப்பது ஏற்புடையதல்ல. எனவே, வரும் மே 31-ம் தேதிக்குள் 4 மாத காலத்தில் அந்த நிலத்தை அங்கு குடியிருப்பவர்கள் காலி செய்து கொடுக்க வேண்டும். இல்லையெனில் அவர்களை காலி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கலாம்” என உத்தரவிட்டுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version