பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களது குழந்தைகளின் கல்வி செலவை அரசு ஏற்கும்: முதல்வர் ஸ்டாலின்

0
297

பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களது குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான அனைத்து கல்வி செலவுகளையும் தமிழக அரசு ஏற்கும். இதற்காக விருதுநகர் மாவட்ட ஆட்சியரின்கீழ் தனி நிதியம் ஏற்படுத்தி, அதற்கு முதல்கட்டமாக ரூ.5 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

விருதுநகர் அருகே பட்டம்புதூரில் தமிழக அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில், 57,556 பயனாளிகளுக்கு ரூ.417 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

பட்டாசு ஆலை ஆய்வுக்கு 9-ம் தேதி நான் சென்றபோது, தொழிலாளர்களிடம் பேசி குறைகளை கேட்டறிந்தேன். அப்போது, அவர்கள் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அறிவிப்பு வெளியிட விரும்புகிறேன்.

அதன்படி, பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களது குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான அனைத்து கல்வி செலவுகளையும் தமிழக அரசே ஏற்கும். இந்த உதவிகளை மாவட்ட அளவிலேயே முடிவு செய்து வழங்கும் வகையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியரின்கீழ் தனி நிதியம் ஏற்படுத்தி, அதற்கு முதல் கட்டமாக ரூ.5 கோடி வழங்கப்படும்.

மாவட்டம்தோறும் களஆய்வு செய்ய தொடங்கி உள்ளேன். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன். இருக்கன்குடி மாரியம்மன் கோயில் திருப்பணி, ஆயத்த ஆடை பூங்கா, சிவகாசி மாநகராட்சி அலுவலகம், 1,286 கிராமங்களுக்கு ரூ.1,387 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய பணிகள் நடந்து வருகின்றன.

தேசிய அளவில் உயர்கல்வி செல்வோர் விகிதம் 33 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தில் 60 சதவீதமாக உள்ளது. இந்த ஆட்சியின் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட திட்டங்களால் உயர்கல்வி சேர்க்கை அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த 95 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். இதற்காக விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு நல் ஆளுமை விருது, பள்ளிக்கல்வித் துறையின் சிறந்த செயல்பாட்டுக்கான சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறந்த பணிக்காக 2024-ம் ஆண்டின் சிறந்த ஆட்சியர் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தை ‘விருதுகள்மிகு’ மாவட்டமாக உயர்த்தி வரும் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உள்ளிட்ட அதிகாரிகளை பாராட்டுகிறேன்.

இந்த விழாவில் அதிகபட்சமாக 40 ஆயிரம் பேருக்கு இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 10.03 லட்சம் பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

‘இந்தியா டுடே’ இதழில் நாட்டின் சக்தி வாய்ந்த 10 நபர்களில் என்னை இடம்பெற வைத்தது தமிழக மக்கள்தான். தமிழகத்தை உயர்த்த, எனது சக்தியை மீறி உழைக்கிறேன். மக்களின் வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் சேவகனாக என் பயணம் தொடரும்.

நம்மை முந்தி வெற்றி பெற வேண்டும் என நமக்கு பின்னால் பலர் வருகின்றனர். எனவே, இன்னும் வேகமாக ஓட வேண்டும் என நினைக்கிறேன். அதையேதான் அமைச்சர்கள், அதிகாரிகளிடமும் எதிர்பார்க்கிறேன்.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, ஆட்சியில் இருந்தபோது மக்கள் நலனை பற்றி கவலைப்படாமல் இருந்தார். தற்போது, கருணாநிதி பெயரில் மக்களுக்கு பயன்படாத திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதாக கூறுகிறார். ஆணவமாக பேசியதால்தான் அதிமுகவுக்கு தொடர் தோல்வி கிடைத்து வருகிறது. தமிழ் சமூகத்துக்காக 80 ஆண்டு காலம் உழைத்த கருணாநிதியின் பெயரை திட்டங்களுக்கு சூட்டாமல், உங்கள் பெயரையா வைக்க முடியும். தமிழக மக்களை வாழ வைக்கும் திட்டங்களை, கருணாநிதியின் பெயரால் நிறைவேற்றியதில் பெருமை கொள்கிறேன்.

திராவிட மாடல் ஆட்சியின் புகழ் வெளிச்சத்தில், புதுவெளிச்சம் தேடும் புற்றீசல்கள் காணாமல்போகும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வரவேற்றார். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, சி.வி.கணேசன், எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ராணி, நவாஸ்கனி, பொதுப்பணி துறை செயலர் மங்கத்ராம் சர்மா, வருவாய் துறை செயலர் அமுதா, வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, எம்எல்ஏக்கள் சீனிவாசன், ரகுராம், தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொழிலாளர்கள் நெகிழ்ச்சி: விருதுநகர் அடுத்த கன்னிசேரி புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் பாதுகாப்பு கட்டமைப்புகள் குறித்து முதல்வர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது, முதல்வரிடம் பேசிய பட்டாசு தொழிலாளி இசக்கியம்மாள், ‘‘பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களது குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வரும் உறுதி அளித்திருந்தார்.

இந்த நிலையில், கோரிக்கை வைத்த மறுநாளே திட்டத்தை உருவாக்கி, நிதியையும் முதல்வர் அறிவித்துள்ளதால் பட்டாசு தொழிலாளர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here