ஷங்கர் இயக்குநராக அறிமுகமான திரைப்படம், ‘ஜென்டில் மேன்’. அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி உள்பட பலர் நடித்த இப்படம் 1993-ல் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்த இப்படத்தை கே.டி.குஞ்சுமோன் தயாரித்தார். இத்திரைப்படம், நவீன 4கே தொழில்நுட்பத்துடன் மேம்படுத்திய பதிப்பாக, டிச. 11-ல் மீண்டும் வெளியாகிறது.
இதுபற்றி கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன், “இந்த மறுவெளியீடு, முந்தைய தலைமுறையினருக்கு ஏக்கம் கலந்த நினைவுகளைத் தூண்டுவதுடன், புதிய தலைமுறையினருக்கு இப்படத்தின் காட்சி நேர்த்தியையும் இசையையும் பெரிய திரையில் அனுபவிக்கும் வாய்ப்பையும் வழங்கும் என்று நம்புகிறேன். அக்காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் இது.
33 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வெளியாக இருக்கிறது. இதை தொடர்ந்து நான் தயாரித்த ‘காதல் தேசம்’, ‘ரட்சகன்’, ‘சூரியன்’ போன்ற படங்களையும் வெளியிட இருக்கிறேன். ‘ஜென்டில்மேன் 2’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரியில் தொடங்கும்” என்றார்.
