சென்னை புரசைவாக்கம் தாலுகா அலுவலக வளாகத்தில் வாக்காளர் அடையாள அட்டைகள் குப்பையாக கொட்டப்பட்டிருந்தன. அவை தவறாக அச்சானதால் கழிவாக கிடந்தவை என வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள புரசைவாக்கம் தாலுகா அலுவலக வளாகத்தில், அரசு கேபிள் நிறுவனத்தின் இ-சேவை மையம் இயங்கி வருகிறது. இம்மைய பணியாளர்கள் நேற்று, வாக்காளர் அட்டைகளை குப்பையில் கொட்டியுள்ளனர். அரசு அடையாள ஆவணங்களை இப்படி குப்பையில் கொட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, குப்பையில் கொட்டப்பட்ட வாக்காளர் அட்டைகளை சேகரித்தனர்.
இது தொடர்பாக வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 2018-ம் ஆண்டுக்கு முன்பு வரை இ-சேவை மையங்களில் ரூ.25 செலுத்தி, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்றவற்றை பெற்றுக்கொள்ளும் வசதி இருந்தது. அப்போது அச்சிடும்போது சரியாக அச்சிடப்படாதது, எழுத்துப் பிழையுடனோ, புகைப்படம் மாறியோ அச்சானது போன்றவை கழிவாக அலுவலகத்திலேயே வைக்கப்பட்டிருந்தன.
அந்த அலுவலகத்தில் எலிகள் தொல்லை அதிகரித்ததால், அலுவலகத்தை தூய்மைப்படுத்தி, அடையாள ஆவண கழிவுகளை இ-சேவை மைய பணியாளர்கள் குப்பையில் கொட்டியுள்ளனர். அந்த ஆவணங்களை முறைப்படி அழிப்பது தொடர்பாக அவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை.
அதனால் அவர்களுக்கு விவரம் தெரிவித்து, எச்சரித்திருக்கிறோம். இங்கு வாக்காளர் அட்டை மட்டுமின்றி, ஆதார், குடும்ப அட்டை கழிவுகளும் இருந்தன. அவற்றை சேகரித்து வைத்திருக்கிறோம். முறைப்படி அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.