விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட மருதங்கோடு பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் 1995ஆம் ஆண்டு முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரதாஸ் என்பவரால் காந்தியடிகள் உருவ சிலை ஒன்று நிறுவப்பட்டது. இந்த சிலை மற்றும் அந்த சிலையை சுற்றி அமைக்கப்பட்ட காம்பவுண்ட் சுவர் போன்றவை சமூக விரோதிகளால் சமீபத்தில் சேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது சம்மந்தமாக புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்தது. இந்த நிலையில் நேற்று (செப்.,11) மாலை சிலை உடைக்கப்பட்ட இடத்திற்கு சென்று விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பட் பார்வையிட்டார்.
இதை அடுத்து காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் கழுவந்தட்டை சந்திப்பில் தீடீரென குவிந்தனர். இதை அடுத்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இரவு 7 மணியளவில் எம் எல் ஏ தலைமையில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.
இதை அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு தினங்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.














