கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றியை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனதாக்கிக் கொண்டார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1-3 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. இதையடுத்து இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீரின் கள வியூகம், அணி தேர்வு உள்ளிட்டவை விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதில் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் அடங்குவர்.
இப்போது அதில் ஒருவராக மனோஜ் திவாரியும் இணைந்துள்ளார். “கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றியில் கம்பீர் என்ற தனி நபர் மட்டுமே காரணமில்லை. அதுவொரு கூட்டு முயற்சி. அதில் பலரது பங்கு உண்டு. ஆனால், அந்த வெற்றிக்கான அடையாளத்தை பெற்றுள்ளது யார் என்று பாருங்கள். பி.ஆர் மூலம் அதை அவர் தன் வசமாக்கிக் கொண்டார். கம்பீர் ஒரு வஞ்சகர். அவர் எப்போதும் சொல்வதை செய்யவே மாட்டார். இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவை பாருங்கள். அவர் என்ன சொன்னாலும் அதை அப்படியே அந்த குழுவில் இருப்பவர்கள் ஏற்பார்கள்” என மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.