‘பொம்மைக்கு இறுதிச் சடங்கு’ – மனதை ரணமாக்கும் காசா வாழ் மழலைகளின் விளையாட்டு வீடியோ

0
25

இஸ்ரேல் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசா நகரில் வாழும் மழலைகள் பொம்மைக்கு இறுதிச் சடங்கு செய்வதுபோல் விளையாடிய வீடியோ இப்போது உலகளவில் சமூக வலைதளங்களில் பரவி கவனம் பெற்றுள்ளது.

போர் மிகக் கொடூரமானது. அதைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது. பிள்ளை மனம் மாறாத மழலைகள் சிலர், பொம்மை ஒன்றை இறுதிச் சடங்குக்கு அந்த வீடியோவில் கொண்டு செல்கின்றனர். வழக்கமாக பொம்மையைக் கொண்டு விளையாடும் உலக அளவிலான குழந்தைகளுக்கு மத்தியில் காசா மழலைகளின் இந்த விளையாட்டு வேதனை தரும் வகையில் அமைந்துள்ளது.

சுமார் 48 வினாடிகள் ரன் டைம் கொண்ட அந்த வீடியோவில் பொம்மை ஒன்றை ஸ்ட்ரெச்சர் மாதிரியான படுக்கை ஒன்றில் வைத்து, அதை அந்த பிஞ்சு கைகள் சுமந்து செல்கின்றன. “பொம்மையை கொண்டு வழக்கமாக விளையாடும் விளையாட்டுக்கான சூழலை தொலைத்த மழலைகளின் நிலை இது” என நெட்டிசன்கள் இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். “இந்த செயலுக்கான புரிதல் இல்லாத அவர்கள், தாங்கள் அன்றாட வாழ்வில் பார்ப்பதை செய்துள்ளனர்” என மற்றொருவர் தெரிவித்துள்ளார். ‘இந்த பூமியில் மிகவும் பாதிக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள்’ என்றும், ‘உடனடி தேவை அமைதி’ என்றும் நெட்டிசன்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் – காசா மோதல்: கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதல் மிக தீவிரமானது. இதையடுத்து இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பாலஸ்தீனத்தை சேர்ந்தவர்களில் சுமார் 72 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்.

இதில் 20 ஆயிரம் பேர் குழந்தைகள்/சிறுவர்கள். இஸ்ரேலின் தாக்குதல் தீவிரத்தில் இருந்த போது ஒரு மணி நேரத்துக்கு ஒரு குழந்தையும், தற்போது பசி/ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் நாளொன்று ஒரு குழந்தையும் காசாவில் உயிரிழந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த அக்டோபரில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இருப்பினும் அதன் பின்னரும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here