ஓமனுடன் தடையற்ற வர்த்தகம்: பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

0
18

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் பிரதமர் மோடி முன்​னிலை​யில் இந்தியா – ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்​தம் நேற்று கையெழுத்​தானது. இதன்மூலம் இந்தியா ஏற்றுமதி செய்யும் 99 சதவீத பொருட்களுக்கு அந்நாட்டில் வரிரத்தாகிறது. அங்கிருந்து இறக்குமதியாகும் 95 சதவீத பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.

எத்​தி​யோப்​பியா பயணத்தை முடித்​துக் கொண்டு பிரதமர் மோடி நேற்று முன்​தினம் ஓமன் சென்​றார். அவரது முன்​னிலை​யில் இந்தியா – ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் நேற்று கையெழுத்​தானது. இந்​திய வர்த்தகம், தொழில் ​துறை அமைச்​சர் பியூஷ் கோயல், ஓமன் வர்த்தக அமைச்​சர் குவா​யிஸ் பின் முகமது அல் யூசப் கையெழுத்​திட்​டனர்.

இதன்மூலம் இந்​தியா ஏற்​றுமதி செய்​யும் ஜவுளி, பிளாஸ்​டிக் பொருட்​கள், பர்னிச்​சர்​கள், மருந்துப் பொருட்​கள், மருத்​துவக் கருவி​கள், வாக​னங்​கள் உள்ளிட்ட 99 சதவீத பொருட்​களுக்கு ஓமனில் அடுத்த ஆண்டு முதல் வரி ரத்தாகிறது. அதே​போல, ஓமனில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படும் பேரீச்​சம்பழம், பளிங்கு கற்​கள், பெட்ரோ ரசாயனப் பொருட்​கள் உட்பட 95 சதவீத பொருட்களுக்கான இறக்​கும​தி வரியை இந்​தியா குறைத்​துள்​ளது. ஓமனில் இருந்து ஆண்​டுக்கு 2 ஆயிரம் டன்பேரீச்​சம்பழங்​களை வரி​யின்றி இறக்​குமதி செய்து கொள்ளலாம்.

இந்​தியப் பொருட்​களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்​துள்ள நிலை​யில், இந்​தியா – ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஒப்பந்த ​நிகழ்ச்​சிக்​கு பிறகு, இந்​தி​ய வம்சாவளியினர், தொழில​திபர்​களை பிரதமர் மோடி சந்​தித்தார். அவர் பேசிய​தாவது: தீபாவளிப் பண்​டிகையை யுனெஸ்கோ தனது கலாச்​சார பட்​டியலில் இணைத்​துள்​ளது. இனி நம்தீபம் உலகையே ஒளிரச்செய்யும்.

இந்​தி​யா​வும், ஓமனும் தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்​டிருப்பது வரலாற்றுச் சிறப்​புமிக்க முடிவு. இது இரு தரப்பு உறவில் புதிய நம்​பிக்கை, உத்​வேகம் அளிக்​கும். கடந்த 11 ஆண்டுகளாக இந்​தி​யா​வின் பொருளா​தா​ரம் மிக வேக​மாக முன்​னேறி வருகிறது. கொள்​கைகளை மட்டுமின்றி, பொருளாதாரத்​தின் மரபையே இந்​தியா மாற்​றி​யுள்​ளது. ஓமன் நிறு​வனங்​கள் இந்​தி​யா​வில் முதலீடு செய்​து, வளர்ச்​சி​யில் பங்​கேற்க வேண்​டும். இவ்​வாறு பிரதமர் பேசினார்.

ரூ.94 ஆயிரம் கோடி வர்த்தகம்: இந்தியா – ஓமன் இடையே இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு 2024-25-ல் ரூ.94 ஆயிரம் கோடியாக இருந்தது. இதில் ஏற்றுமதி ரூ.36 ஆயிரம் கோடி, இறக்குமதி ரூ.58 ஆயிரம் கோடியாக உள்ளது. இந்திய விவசாயிகள், குறு, சிறு,நடுத்தர தொழில் நிறுவனங்களின் நலன் கருதி பால் பொருட்கள், தேயிலை, காபி, ரப்பர், புகையிலைப் பொருட்கள், தங்கம், வெள்ளி ஆபரணங்கள், காலணிகள், விளையாட்டுப் பொருட்கள், உலோக கழிவுப் பொருட்கள் ஆகியவற்றுக்கு இந்தியா வரிச்சலுகை அளிக்கவில்லை. இதனால், தடையற்ற வர்த்தக ஒப்பந்த பட்டியலில் இவை இடம்பெறவில்லை.

மோடிக்கு ஓமனின் உயரிய விருது: பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளும் அனைத்து நாடுகளும் அவருக்கு தங்கள் நாட்டின் உயரிய விருதை அளித்து கவுரவித்து வருகின்றன. அந்த வகையில், ஏற்கெனவே 28 நாடுகள் அவருக்கு தங்கள் நாட்டின் மிக உயரிய விருதை வழங்கியுள்ளன. இந்நிலையில், இந்தியா – ஓமன் உறவை வலுப்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய ‘ஆர்டர் ஆஃப் ஓமன்’ என்ற விருதை ஓமன் சுல்தான் ஹைத்தம் பின் தாரிக் நேற்று வழங்கி கவுரவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here