இலங்கையில் கடந்த 2019 ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் ஞாயிறு அன்று தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 11 இந்தியர்கள் உட்பட 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்புடைய உள்ளூரைச் சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதாக தெரியவந்தது. இந்த வழக்கில் முன்னாள் உளவுத் துறை தலைவர் சுரேஷ் சாலே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். ஈஸ்டர் தாக்குதல் நடந்தபோது சுரேஷ் சாலே வெளிநாட்டில் தூதரகப் பணியில் இருந்தார். 2015-க்கு முன் மகிந்த ராஜபக்ச அரசில் உளவுத் துறை தலைவராக இருந்தார்.
இதுகுறித்து திருச்சபை செய்தித் தொடர்பாளர் சிரில் காமினி கூறுகையில், “கோத்த பய ராஜபக்ச ஆட்சியில் இந்த வழக்கு விசாரணை திட்டமிட்டு நிறுத்தப்பட்டது. தற்போதைய அரசின் முறையான விசாரணை காரணமாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் சாலே கைது செய்யப்பட்டுள்ளதாக நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.














