ஊழல் வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோஸிக்கு 5 ஆண்டுகள் சிறை

0
50

லிபிய முன்னாள் அதிபர் கடாபிக்கு ஆதரவாக செயல்பட தனிப்பட்ட முறையில் ஒப்பந்தம் செய்து கொண்ட வழக்கில், பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸிக்கு பாரிஸ் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

2007 முதல் 2012 வரை பிரான்சின் அதிபராக இருந்தவர் நிகோலஸ் சர்கோஸி. 1969 முதல் 2011 வரை லிபியாவை ஆட்சி செய்தவர் மம்மர் கடாபி. கடாபி கொல்லப்பட்டதை அடுத்தே அந்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கடாபிக்கு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், சர்வதேச அரங்குகளில் அவருக்கு ஆதராகப் பேச பிரான்ஸ் அதிபராக இருந்த நிக்கோலஸ் சர்கோஸி முன்வந்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு பதிலாக, சர்கோஸியின் தேர்தல் பிரச்சாரத்துக்கு கடாபி நிதி உதவி செய்வதற்கான ஒப்பந்தம் இருதரப்புக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த பாரிஸ் நீதிமன்றம், குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக்கூறி சர்கோஸிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது. மேலும், அவருக்கு ஒரு லட்சம் யூரோ அபராதம் விதிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து சர்கோஸி மேல்முறையீடு செய்தாலும், அவர் சிறைக்குச் செல்வது உறுதி என கூறப்படுகிறது.

தன் மீதான குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வரும் சர்கோஸி, நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாகக் கூறியுள்ளார். நான் சிறையில் தூங்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினால், நான் சிறையில் தூங்குவேன். ஆனால், தலைகுனிய மாட்டேன் என சர்கோஸி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here