சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தொடர் கவனம்செலுத்த வேண்டும் என தமிழக அரசை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தமிழகத்தில் கோவை, திருப்பூர், புதுக்கோட்டை, சேலம் உட்பட பல மாவட்டங்களில் கடந்தசில நாட்களாக கனமழை பெய்துகொண்டிருக்கிறது. இதனால் அந்தபகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டு, சாலைகள் வெள்ளநீரால் மூழ்கிய நிலையிலும், ஆங்காங்கே மின் கம்பிகள் அறுந்து விழுந்துஉயிரிழப்புகளும் கூட ஏற்பட்டுள்ளன. இவ்வாறு மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எந்தவிதமான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கையில் ஈடுபடாமல் திமுக அரசு செயலிழந்து நிற்கிறது.
குறிப்பாக சென்னை மட்டுமே தமிழகம் என்ற நினைப்பில் முதல்வர்ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் செயல்பட்டு வருவதுமக்களை முகம்சுளிக்க வைக்கிறது.மழை வெள்ள காலங்களில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய வருவாய்த் துறை, உள்ளாட்சி துறைகளின் அமைச்சர்களுக்கு பதிலாக உதயநிதி மட்டுமே ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்று பணியாற்றுவது போன்ற மாயயை திமுக உருவாக்கி வருகிறது. இந்த நடவடிக்கைகளை எல்லாம்கைவிட்டுவிட்டு, பாதிப்படைந்துள்ள மக்களை காக்கும் பணியில் தமிழக அரசு கடமை உணர்வோடு செயல்பட வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே மாநிலம் முழுவதும் மக்கள் அதன் பாதிப்பை அனுபவிக்கத் தொடங்கி விட்டனர். இதற்கெல்லாம் காரணம் மழைநீர் வடிகால்களும், பாசனக் கால்வாய்களும் முறையாக தூர்வாரப்படாதது தான். அதேபோலஅறுந்து விழுந்த மின்சார கம்பியைமிதித்ததால் ஒரேநாளில் 4 பேர்உயிரிழந்தும் உள்ளனர். மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டியமிகச் சாதாரணமான பராமரிப்புப் பணிகளைக் கூட மேற்கொள்ளாமல் தமிழக அரசும், மின்சார வாரியமும் அலட்சியமாக செயல்பட்டுள்ளன.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா: வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் மின்வாரியத்தில் குறைந்த பணியாளர்களைக் கொண்டு சமாளித்துவிடலாம் என அரசு எண்ணாமல்,கேங்மேன்களை கள உதவியாளர்களாகவும் தேர்ச்சி பெற்ற 5 ஆயிரம்கேங்மேன்களையும், ஒப்பந்தபணியாளர்களையும் வயர்மேன்களாக நியமித்து மின்தடை, உயிரிழப்புகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வானப் பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பு மையங்களுக்கு மாற்ற வேண்டும். வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகளில் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். பாதுகாப்பான குடிநீர், சாலைப் போக்குவரத்து, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின்போது மக்கள் சந்திக்கும் இன்னல்களே அரசு நிர்வாகத்தின் தோல்வியை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும்.
வி.கே.சசிகலா: வரும் முன் காப்போம் என்று செயல்பட வேண்டிய அரசு, பருவமழை காலங்களில் தேவையான அனைத்துபாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும்.














