இந்தியா – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி லக்னோவிலுள்ள பாரத ரத்னா ஸ்ரீஅடல் பிகாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கினார் நமன் திர். முதலில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஷாய் ஹோப், கமில் பூரன் ஆகியோர் களமிறங்கினர். கமில் பூரன் 12 ரன்களில் வீழ்ந்தார். ஷிம்ரன் ஹெட்மயர் 5, ரோவ்மன் பாவெல் 0, ராஸ்டன் சேஸ் 5, ரொமாரியோ ஷெப்பர்ட் 7, மேத்யூ போர்ட் 2, ஷமார் ஸ்பிரிங்கர் 9, அகீல் ஹொசைன் 15 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷாய் ஹோப் அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் சேர்த்தார்.
ஷெர்பான் ருதர்போர்ட் 34 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களை விளாசி 56 ரன்களைக் குவித்தார். இந்திய அணி தரப்பில் நமன் திர் 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், மயங்க் யாதவ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர்.
இதைத் தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 14.4 ஓவர்களில் 2 விக்கெட் களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 43 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 102 ரன்களும், இஷான் கிஷன் 27 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 37 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக சஞ்சு சாம்சன் 11, அபிஷேக் சர்மா 21 ரன்களில் ஆட்டமிழந்தனர். 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
