கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிக்காக முதல் ஆகாய கப்பல் பரிசோதனை வெற்றி: டிஆர்டிஏ சாதனை

0
295

கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிக்காக வானில் மிக உயரத்தில் நீண்ட நேரம் பறக்கும் ஆகாய கப்பல் பரிசோதனையை டிஆர்டிஓ வெற்றிகரமாக மேற்கொண்டது. புவி கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிக்கான கருவிகளுடன், வானில் மிக உயரத்தில் பறக்கும் ஆகாய கப்பல் தொழில்நுட்பம் உலகில் ஒரு சில நாடுகளிடம் மட்டுமே உள்ளன.

இந்நிலையில் அதேபோன்ற ஆகாய கப்பலை ஆக்ராவை சேர்ந்த ஏரியல் டெலிவரி ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (ஏடிஆர்டி) உருவாக்கியது. இந்த ஆகாய கப்பல், கண்காணிப்பு கருவியை வானில் சுமார் 17 கி.மீ தூரம் உயரம் வரை எடுத்துச் செல்லும். இந்த கண்காணிப்பு கருவியில் பொருத்தப்பட்ட சென்சார்கள் மூலம் பெறப்படும் தரவுகள் தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் பெறப்பட்டு கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிக்கு பயன்படுத்தப்படும்.

இந்த ஆகாய கப்பலை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ) மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஷியாபூரில் நேற்று முன்தினம் பறக்கவிட்டு பரிசோதனை செய்தது. மொத்தம் 62 நிமிடங்கள் இந்த ஆகாய கப்பல் பறந்தது. அப்போது பரிசோதனை குழுவினர் ஆகாய கப்பலின் அழுத்தம், அவசரமாக தரையிறக்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆகாய கப்பல் மாதிரியின் சோதனை வெற்றிகரமாக முடிந்தது மிக முக்கிய சாதனை என டிஆர்டிஓ தலைவர் சமிர் வி.காமத் தெரிவித்தார். ஆகாய கப்பல் கண்காணிப்பு கருவி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதற்காக டிஆர்டிஓ குழுவினருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.

ஆகாய கப்பல் கண்காணிப்பு கருவி மூலம் நாட்டின் புவி கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும். இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் நிலையில் உளவுப் பணிக்கான இந்த ஆகாய கப்பல் கண்காணிப்பு கருவி வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here