மகாராஷ்டிரா மருத்துவமனையில் தீ விபத்து – 3 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

0
22

மாகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்ட மருத்துவமனையில் உள்ள மகளிர் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

இன்று (ஆக.24 – திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணி அளவில் அந்த மருத்துவமனையில் மூன்றாவது தளத்தில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

முதற்கட்ட தகவலின் படி அந்த வார்டில் இருந்த வென்டிலேட்டர் வெடித்தது இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு பிறகே விபத்துக்கான காரணம் உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட வார்டில் சுமார் 39 பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். தீ பரவ தொடங்கியதும் மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு சிகிச்சையில் இருந்த குழந்தைகளை மீட்டனர்.

புகை மற்றும் தீயின் தாக்கத்துக்கு மத்தியில் குழந்தைகளை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்வதில் கவனமாக இருந்தனர்.

இருப்பினும் அந்த வார்டில் சிகிச்சையில் இருந்த பல குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், தீயில் காயமடைந்த மூன்று பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. மேலும், ஆறு குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்போது அங்கு தீ முழுவதுமாக அணைக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து விசாரணை

இந்த தீ விபத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் அவசர கால பாதுகாப்பு அமைப்பு சார்ந்த ஏற்பாடுகள் முறையாக செயல்பாட்டில் இருந்தனவா என்ற சந்தேகத்தில் ஏற்படுத்தி உள்ளது. அது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தகவல்.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட வார்டில் இருந்த சாதனங்கள் மற்றும் மின் அமைப்பின் செயல்பாடு குறித்தும் இதில் ஆய்வு செய்யப்படுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here