பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி (72) சாலை விபத்தில் மரணமடைந்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தியில் பல படங்களைத் தயாரித்தவர் ஆர்.பி.சவுத்ரி. ராஜஸ்தானை சேர்ந்த இவர், பல படங்களை விநியோகித்தும் உள்ளார்.
தமிழில், 1990-களில் ஏராளமான புதிய இயக்குநர்களையும் நடிகர், நடிகைகளையும் அறிமுகப்படுத்தியவர் இவர். விக்ரமன் அறிமுகமான ‘புதுவசந்தம்’, கே.எஸ்.ரவிகுமார் அறிமுகமான ‘புரியாத புதிர்’, சரத்குமார் நடித்த ‘சேரன் பாண்டியன்’, ‘நாட்டாமை’, ‘சூர்ய வம்சம்’, விஜய் நடித்த ‘பூவே உனக்காக’, பாலசேகரன் அறிமுகமான ‘லவ் டுடே’ உள்பட பல சூப்பர் ஹிட் படங்களைத் தயாரித்துள்ளார்.
இப்போது, விஷால் இயக்கி, நடிக்கும் ‘மகுடம்’ சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது திரைப்படம். இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது. இந்நிறுவனத்தின் 100-வது திரைப்படத்தை விஜய் நடிப்பில் தயாரிக்க இருப்பதாக ஆர்.பி.சவுத்ரி அறிவித்திருந்தார். அது நடக்கவில்லை. பின்னர், ‘சூர்யவம்சம்’ படத்தின் 2-வது பாகத்தைத் தயாரிக்க இருந்தார். இவர், தனது சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூருக்கு அவ்வப்போது சென்று வருவது வழக்கம். சமீபத்தில் அங்கு சென்ற அவர், நேற்று மாலை காரில் சென்றுகொண்டிருந்தார்.
எதிர்பாராத விதமாக மாடு ஒன்று சாலையில் குறுக்கிட்டதால் ஓட்டுநர் காரை திருப்பினார். அப்போது பாலத்தில் கார் மோதியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆர்.பி.சவுத்ரிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அந்த இடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. அவர் மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் உள்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த ஆர்.பி.சவுத்ரிக்கு சுரேஷ், ஜீவன், ஜித்தன் ரமேஷ், நடிகர் ஜீவா ஆகிய மகன்கள் உள்ளனர்.
