மருத்துவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி, காரைக்கால் அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்காலில் உள்ள மாவட்ட அரசு பொது மருத்துவமனையில், கடந்த 8-ம் தேதி நள்ளிரவு பணியில் இருந்த மருத்துவர் சக்தி மைந்தன் என்பவரை நோயாளியின் உறவினர்கள் தாக்கியதில், அவர் காயமடைந்தார். இது தொடர்பாக காரைக்கால் நகர காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், மருத்துவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வலியுறுத்தியும் புதுச்சேரி அரசு மருத்து அதிகாரிகள் சங்கம் சார்பில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் காலை 8 மணி முதல் 9 மணி வரை ஒரு மணி நேரம் அவசர சிகிச்சை பிரிவு நோயாளிகள் பாதிக்காத வகையில் 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலர்கள், மருத்துவ அலுவலர்கள், ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவில்லை என்றால் போராட்டம் தீவிரம் அடையும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். போராட்டம் காரணமாக, புற நோயாளிகள் பிரிவில் நோயாளிகள் நீண்ட நேரம் சிகிச்சைக்காக காத்திருந்தனர்.














