எண்ணூர் மற்றும் உப்பூர் அனல்மின் நிலையங்களின் கட்டுமானப் பணிகளை பொது, தனியார் கூட்டு முயற்சியில் எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து, தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்திடம் மின்வாரியம் ஆலோசனை கேட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், எண்ணூரில் 660 மெகாவாட் திறனில் அனல்மின் நிலையம் அமைக்கும் பணி கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இதன் கட்டுமானப் பணியை மேற்கொண்ட தனியார் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியது. இதனால், வேறொரு நிறுவனத்திடம் கடந்த 2022, மார்ச் மாதம் பணி ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அந்நிறுவனமும் பணியை தாமதம் செய்ததால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
இதேபோல், ராமநாதபுரம் மாவட்டம், உப்பூரில் தலா 800 மெகாவாட் திறனில் இரு அலகுகள் உடைய அனல்மின் நிலையம் அமைக்கும் பணி கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கியது. இதை எதிர்த்து சிலர் தொடர்ந்த வழக்கில், பசுமைத் தீர்ப்பாயம் கடந்த 2021-ம் ஆண்டு பணிகளை தொடர தடை விதித்தது. இதனால், 35 சதவீத பணிகளுடன் இத்திட்டமும் முடங்கியது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘எண்ணூர் மற்றும் உப்பூர் அனல்மின் திட்டங்கள் பொது, தனியார் கூட்டு முறையில் செயல்படுத்தப்பட உள்ளது. மின்வாரியம் முதல்முறையாக இந்த கூட்டு முயற்சியை செயல்படுத்துவதால், இதுகுறித்து தமிழக உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்திடம் ஆலோசனைக் கேட்கப்பட்டுள்ளது’ என்றார்.