சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன் நடித்துள்ள படம் ‘என்ன விலை’.
இதில் ஒய்.ஜி.மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன் ராம், சுவாமி நாதன், தீபா சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். குடும்ப த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இதை கலாமயா பிலிம்ஸ் சார்பில் கிதேஷ் வி தயாரித்துள்ளார்.
இப்படத்தின் முதல் தோற்றத்தை, படப்பிடிப்பு நடந்த தனுஷ்கோடி அருகிலுள்ள பாலம் கிராம மக்களை வைத்து வெளியிட்டுள்ளனர். இது அந்தக் கிராம மக்களுக்கு நன்றி செலுத்தும் நிகழ்வாக மாறியது.
இயக்குநர் சஜீவ் பழூர் கூறும்போது, “ஒரு படத்தை உருவாக்கும் போது கதைக்கான இடத்தை தேர்வு செய்வோம். ஆனால், சில நேரங்களில் அந்த இடமும், அங்கு வாழும் மக்களும் கதையின் ஓர் அங்கமாகவே மாறிவிடுகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு நடந்த பாலம் கிராம மக்கள், எங்களை குடும்பமாக அரவணைத்தனர். இந்த திரைப்படம் முதலில் அவர்களுக்கே சொந்தமானதாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதனால் அவர்களை வைத்து முதல் தோற்றத்தை வெளியிட்டோம்” என்றார்.
