ஈரானில் காணாமல்போன 3 இந்தியர்களை கண்டுபிடிக்க தூதரகம் தீவிர முயற்சி

0
194

ஈரானில் காணாமல்போன 3 இந்தியர்களை கண்டுபிடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹுஷன்பிரீத் சிங் (சங்ரூர்), ஜஸ்பால் சிங் (எஸ்பிஎஸ் நகர்), அம்ரித்பால் சிங் (ஹோஷியார்பூர்) ஆகிய 3 இளைஞர்கள் கடந்த மே 1-ம் தேதி விமானம் மூலம் ஈரான் சென்றனர். ஆனால் டெஹ்ரானில் தரையிறங்கிய பிறகு அவர்களை காணவில்லை.

பஞ்சாபின் ஹோஷியார்பூரை சேர்ந்த ஏஜென்ட் ஒருவர் இவர்களை துபாய், ஈரான் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாக உறுதி அளித்துள்ளார். ஆனால் டெஹ்ரான் சென்ற பிறகு மூவரும் ஒரு கும்பலால் கடத்தப்பட்டனர்.

ரூ.1 கோடி பணம் தராவிடில் மூவரையும் கொன்றுவிடுவோம் என இக்கும்பல் தொலைபேசியில் மிரட்டியதாக இளைஞர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இவர்கள் அளித்த புகாரை தொடர்ந்து ஈரானில் மூவரும் கடத்தப்பட்டதை இந்தியத் தூதரகம் உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த விவகாரத்தை ஈரான் அதிகாரிகளிடம் இந்திய தூதரகம் கொண்டு சென்றுள்ளது. மூவரையும் உடனடியாக கண்டுபிடித்து அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான முயற்சிகள் மற்றும் முன்னேற்றங்களை குடும்பத்தினருடன் தூதரகம் அவ்வப்போது பகிர்ந்து கொண்டு வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here