இந்தியாவின் வாக்கு எண்ணிக்கை நடைமுறைக்கு எலான் மஸ்க் பாராட்டு

0
23

இந்தியாவின் வாக்கு எண்ணிக்கை நடைமுறையை தொழிலதிபர் எலான் மஸ்க் பாராட்டி உள்ளார். அதேநேரம் அமெரிக்க தேர்தல் முறை மீது அதிருப்தி தெரிவித்துள்ளார்.

‘இந்தியா 64 கோடி வாக்குகளை ஒரே நாளில் எண்ணி முடித்தது எப்படி’ என்ற ஒரு ஊடக செய்தித் தலைப்பின் ஸ்க்ரீன்ஷாட்டை ஒருவர் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை நேற்று டேக் செய்துள்ள டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க், “இந்தியா 64 கோடி வாக்குகளை ஒரே நாளில் எண்ணி முடித்தது. கலிபோர்னியாவில் வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடர்கிறது” என பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. பெரும்பாலான மாகாணங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டன. ஆனாலும் அதிக மக்கள் தொகை கொண்ட கலிபோர்னியாவில் இன்னும் வாக்கு எண்ணிக்கை முடியவில்லை. தேர்தல் முடிந்து 20 நாட்கள் முடிந்த நிலையிலும் இன்னும் அங்கு தேர்தல் முடிவு வெளியாகவில்லை என்பதைத்தான் எலான் மஸ்க் சுட்டிக்காட்டி உள்ளார்.

கலிபோர்னியா உள்ளிட்ட சில மாகாணங்களில் எப்போதுமே வாக்கு எண்ணிக்கை பல வாரங்களுக்கு நீடிக்கும். கலிபோர்னியாவை பொருத்தவரை பெரும்பாலானவர்கள் அஞ்சல் மூலம் வாக்குகளை செலுத்துவார்கள். இத்தகைய வாக்குகளை எண்ணுவதற்கு உறையின் மீது உள்ள கையெழுத்து சரிபார்த்தல் உட்பட பல்வேறு நடைமுறைகள் உள்ளன.

மேலும் இந்தியாவைப் போல மத்திய தேர்தல் ஆணையம் அமெரிக்காவில் இல்லை. அந்தந்த மாகாணங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் அலுவலகங்கள்தான் தேர்தல் பணிகளை கவனிக்கும். அதேநேரம் ஒவ்வொரு மாகாணத்துக்கும் தனித்தனி தேர்தல் விதிமுறைகள் உள்ளன. இதுவே தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் கடந்த 2000-வது ஆண்டு முதல் தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் துல்லியமாகவும் விரைவாகவும் வாக்குகளை எண்ணி முடிக்க முடிகிறது. இதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்வதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்கும் கருவியும் (விவிபாட்) பயன்படுத்தப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற்றது. 90 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதில் 64 கோடி பேர் வாக்களித்தனர். மத்திய தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பின் பேரில், அனைத்து தொகுதிகளில் பதிவான வாக்குகளும் ஒரே நாளில் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதைத்தான் எலான் மஸ்க் பாராட்டி உள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. இதில் 9 கோடி வாக்குகள் பதிவான போதிலும் ஒரே நாளில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மகாராஷ்டிர மாநிலத்தின் மக்கள் தொகை அமெரிக்காவின் கலிபோர்னியாவைப் போல 4 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here