‘தி அமெரிக்கா பார்ட்டி’ – புதிய கட்சி தொடங்க எலான் மஸ்க் தீவிரம்

0
162

அமெரிக்காவில் புதிய கட்சியை தொடங்க தொழிலதிபர் எலான் மஸ்க் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்புக்கு, தொழிலதிபர் எலான் மஸ்க் முழு ஆதரவு அளித்தார். தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்று கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்றார். இதன்பிறகு அரசு செயல் திறன் என்ற பெயரில் புதிய துறை உருவாக்கப்பட்டு, அதன் தலைவராக எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார். அதிபரின் சிறப்பு ஆலோசகராகவும் அவர் செயல்பட்டார்.

இந்த சூழலில் அதிபர் ட்ரம்ப் தரப்பில் “பிக், பியூட்டிபுல்” என்ற மசோதா வரையறுக்கப்பட்டு இருக்கிறது. புதிய மசோதாவை மஸ்க் மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறார். இதன்காரணமாக அரசு செயல் திறன் துறை தலைவர் பதவியில் இருந்து விலகிய அவர், அதிபர் ட்ரம்புக்கு எதிராக சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

கடந்த 5-ம் தேதி எலான் மஸ்க் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “அமெரிக்காவில் புதிய கட்சியை தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று தெரிவித்தார். இதுதொடர்பாக எக்ஸ் வலைதளம் வாயிலாக அவர் கருத்து கணிப்பையும் நடத்தினார். இதில் 80 சதவீதம் பேர், எலான் மஸ்க் புதிய கட்சியை தொடங்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கடந்த 7-ம் தேதி மஸ்க் வெளியிட்ட பதிவில், “அமெரிக்காவில் புதிய கட்சியை தொடங்குவது தொடர்பாக மக்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். 80 சதவீதம் பேர் எனது கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். புதிய கட்சி தொடங்குவது காலத்தின் கட்டாயம்” என்று தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, “தி அமெரிக்கா பார்ட்டி” என்ற பெயரையும் அவர் முன்மொழிந்திருக்கிறார்.

இதுகுறித்து எலான் மஸ்கின் ஆதரவாளர்கள் கூறும்போது, “கடந்த அதிபர் தேர்தலில் மஸ்கின் ஆதரவு, நிதியுதவி காரணமாகவே டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். தற்போது அமெரிக்க மக்களின் நலன்களுக்கு எதிராக அவர் செயல்படுகிறார். எனவே மக்களின் நலன் கருதி புதிய கட்சியை தொடங்க மஸ்க் முடிவு செய்திருக்கிறார். இதில் அவர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்” என்று தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here