சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ் குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சி பாகுபாடின்றி கவுன்சிலர்கள் பலர், சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் எங்களின் புகாரை கண்டுகொள்வதில்லை. சரியான பயனாளிகளுக்கு சாலையோர வியாபாரிக்கான அடையாள அட்டைகளை வழங்க வேண்டும். சாலையோர வியாபாரம் அனுமதிக்கப்பட்ட பகுதி, அனுமதிக்கப்படாத பகுதி குறித்து, கவுன்சிலர்களுடன் கலந்தாலோசித்து மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டும்.
சாலையோர வியாபாரிகள் பலர் அவர்கள் பெயரில் அனுமதி பெற்று, அங்கு கடை நடத்த வாடகைக்கு விடுகின்றனர். அவர்களின் அடையாள அட்டையை ரத்து செய்ய வேண்டும். மாநகரம் முழுவதும் உள்ள திறந்தவெளி நிலங்கள் அனைத்தையும் கணக்கெடுத்து மாநகராட்சிக்கு பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றனர்.
கவுன்சிலர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் பிரியா பதில் அளித்தார். பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
சென்னை மாநகரப் பகுதி முழுவதும் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சட்டங்களும், நீதிமன்ற தீர்ப்புகளும் நாய்கள் மற்றும் அதை பாதுகாப்போருக்கு சாதகமாக உள்ளன. இந்நிலையில், தெருநாய்களை கட்டுப்படுத்த, இனக்கட்டுப்பாடு என்ற ஒற்றை தீர்வை நோக்கி மாநகராட்சி இயங்கி வருகிறது. தற்போது மாநகராட்சி சார்பில் புளியந்தோப்பு, கண்ணம்மாபேட்டை, லாயிட்ஸ் காலனி, மீனம்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய 5 இடங்களில் நாய்கள் இனக்கட்டுப்பாடு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ள மாதவரம், அண்ணாநகர், வளசரவாக்கம் ஆகிய 3 மண்டலங்களிலும் தலா ஒரு நாய்கள் இனக்கட்டுப்பாடு மையம் மொத்தம் ரூ.4 கோடியே 17 லட்சத்தில் அமைக்க மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகளில் அவசர காலங்களில் தனியார் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மயக்கவியல் நிபுணர்கள் மதிப்பூதிய அடிப்படையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அழைக்கப்படுகின்றனர். ஏற்கெனவே அறுவை சிகிச்சை நிபுணருக்கு ரூ.1000 வழங்கப்பட்டது. அதை ரூ.2500 ஆக உயர்த்தவும், மயக்க மருந்து நிபுணர்களுக்கு ரூ.1000-லிருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு மளிகை, காய்கறி மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை டியூசிஎஸ் கூட்டுறவு நிறுவனத்தில் வாங்க மன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாதவரம், குமாரப்பாபுரம் முதன்மை சாலைக்கு `டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி சாலை’ எனப் பெயர் சூட்ட மன்றத்தின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத் துறை சார்பில் கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிக்காக பாலவாக்கம், கொட்டிவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் அரசு புறம்போக்கு நில வகைப்பாடு கொண்ட நிலத்தை நெடுஞ்சாலைத் துறைக்கு நில மாற்றம் செய்வதற்கு மாநகராட்சி தடையின்மை சான்று வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 245 பள்ளிகளுக்கு ரூ.8 கோடியில் 980 சிசிடிவி கேமராக்களை பொருத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி கல்வித் துறையில் பணி நியமனம், பதவி உயர்வு, பணியிட மாற்றம் குறித்து தனி வரைவு கல்வி பணி விதிகளை உருவாக்கி அரசுக்கு அனுப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க திட்டமிட்டிருந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக அத்திட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளது. இதற்கு மன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மொத்தம் 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இனிப்பு வழங்கிய பாஜக கவுன்சிலர்: மாமன்ற கூட்டத்துக்கு வந்த கவுன்சிலர்களுக்கு பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் இனிப்பு வழங்கினார். `துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளுக்கு இனிப்பு வழங்குகிறீர்களா நன்றி’ என திமுக கவுன்சிலர்கள் கூறியதால், கவுன்சிலர்கள் உணவருந்தும் அரங்கம் சிரிப்பொலியால் அதிர்ந்தது. மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்காக இனிப்பு வழங்கியதாக பாஜக கவுன்சிலர் விளக்கம் அளித்தார். பின்னர் திமுக கவுன்சிலர்களும் உதயநிதி பிறந்த நாளுக்காக இனிப்பு வழங்கினர்.