நாடாளுமன்ற மழைக்கால கூட்டம் தொடங்கும் நிலையில் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் ஆலோசனை

0
18

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13 வரை நடைபெறுகிறது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் எம்பி.க்களுக்கான ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது.

இதுகுறித்து ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ‘‘மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டுக்குரிய நியாயமான உரிமைகளைக் காக்கவும் திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் உரத்துக் குரலெழுப்புவார்கள்.

மத்திய அரசு கொண்டு வரும் எந்தப் புதிய சட்ட மசோதாவாக இருந்தாலும், மாநில உரிமைகளையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி மாண்பினையும் பாதுகாத்திடும் வகையிலேயே திமுகவின் நிலைப்பாடு அமையும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக எம்பிக்கள் சிலரிடம் விசாரித்தபோது, ‘‘கடந்த முறை கடும் எதிர்ப்பால் நிறைவேற்ற முடியாமல் போன தொகுதி மறுவரையறை, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ உள்ளிட்ட சர்ச்சைக்குரிய சில மசோதாக்களை இந்த மழைக்கால கூட்டத்தொடரில் மீண்டும் அறிமுகப்படுத்த மத்திய அரசு திரைமறைவில் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதுதென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை முடக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த முறையும் மிகக்கடுமையான சட்ட நுணுக்கங்களுடன் இதனை எதிர்த்துப் போராட முடிவு செய்துள்ளோம்.

மேலும், அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் எழுந்துள்ள மோசடி சர்ச்சை, நாடு தழுவிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம், எத்தனால் எரிபொருள் ஊழல் குற்றச்சாட்டுகள், மேற்கு ஆசியப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் அதனால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வு, வெளியுறவுக் கொள்கையில் மத்திய பாஜக அரசின் தொடர் தோல்விகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் எதிர்க்கட்சிகளுடன் ஒருங்கிணைந்து எதிர்ப்பைப் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளோம்.

இதையெல்லாம் தாண்டி, கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு மேகேதாட்டுவில் அணை கட்டுவதில் பிடிவாதமாக இருக்கிறது. இதனால் தமிழக விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே காங்கிரஸ் கட்சியின் இரட்டை வேடத்தை நாடாளுமன்றத்தில் தோலுரித்துக் காட்டுவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம்’’ என்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here