கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாகக் கூறி கேரள காங்கிரஸ் நிர்வாகி பி.சரின் நீக்கம்

0
269

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் நவம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் கேரள காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் ராகுல் மம்கூடதில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதற்கு மாநில காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பி.சரின் எதிர்ப்பு தெரிவித்தார்.

பின்னர் சரின் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கேரள மாநில காங்கிரஸ் பிரிவு, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் உட்பட 3 பேரின் கட்டுப்பாட்டில் உள்ளது. கட்சி பிரமுகர்கள் தங்கள் கருத்துகளை கூற அவர்கள் வாய்ப்பு அளிப்பதில்லை. நான்தான் எல்லாம் என்ற மனநிலையில் சதீசன் செயல்படுகிறார். எனவே, பாலக்காடு இடைத்தேர்தலில் இடதுசாரிகளுக்கு ஆதரவாக செயல்படப் போகிறேன்” என்றார்.

இதையடுத்து, கேரள காங்கிரஸ் சார்பில் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “டாக்டர் சரின் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். எனவே, அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்” என கூறப்பட்டுள்ளது. இதனிடையே, பாலக்காடு தொகுதி இடைத்தேர்தலில் டாக்டர் சரினை இடதுசாரி முன்னணி வேட்பாளராக நியமிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here