குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று நடைபெறவுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் விழாவில் பங்கேற்பதற்கான இலவச முன்பதிவு முதன்முறையாக ‘புக்மைஷோ’ (BookMyShow) செயலி மூலம் தொடங்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்குள் அனைத்து இடங்களும் நிரம்பின.
வதோதரா மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த டிஜிட்டல் முயற்சிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், அனைத்து இடங்களும் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில் மேலும் 42,000-க்கும் மேற்பட்டோர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு ‘எம்-டிக்கெட்’ மற்றும் கியூ.ஆர் குறியீடு வழங்கப்படும். டிஜிட்டல் முறையில் நுழைவுச் சீட்டு சரிபார்க்கப்பட்டு, கூட்ட நெரிசலின்றி பார்வையாளர்கள் தங்களின் இருக்கைகளுக்குச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரத்யேக சரக்கு ரயில் பாதை
குஜராத் மாநிலம் வதோதராவுக்கு இன்று வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டவுள்ளார். குறிப்பாக, மேற்கு பிரத்யேக சரக்கு ரயில் பாதையின் கீழ் ரூ.20,700 கோடிக்கும் அதிகமான செலவில் 326 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள சனந்த் (வடக்கு)-மகர்புரா, நியூ உம்பர்கான்-நியூ சஃபாலே மற்றும் நியூ சஃபாலே-ஜே.என்.பி.டி ஆகிய மூன்று பிரிவுகளை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இதன் மூலம் மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்துடன் நேரடி ரயில் இணைப்பு ஏற்பட்டு, தொழிற்பேட்டைகளுக்கான சரக்கு போக்குவரத்து விரைவுபடுத்தப்படும். மேலும், நியூ சனந்த், நியூ மகர்புரா, நியூ உம்பர்கான் மற்றும் மும்பை நியூ ஜே.என்.பி.டி ஆகிய இடங்களிலிருந்து புதிய சரக்கு ரயில் சேவைகளையும், வதோதரா – தாண்டா ரோடு இடையிலான புதிய பயணிகள் ரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
ரூ.14,000 கோடியில் திட்டங்கள்
இதுதவிர, ரூ.9,700 கோடி மதிப்பிலான 329 கி.மீ தொலைவுள்ள 3 புதிய ரயில்வே திட்டங்களுக்கும் (வதோதரா-ரத்லம் 3 மற்றும் 4 வது ரயில் பாதைகள், மியாகம் கர்ஜன்-சோரண்டா-மல்சார் அகலப்பாதை மாற்றம், விஷ்வாமித்ரி-தபோய் இருப்புப் பாதை இரட்டிப்பாக்கம்), ரூ.1,780 கோடி மதிப்பிலான 3 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும், ரூ.2,600 கோடி மதிப்பிலான குஜராத் மாநில அரசின் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
