ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு ட்ரம்ப் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியானது. ஆனால், இந்தச் செய்திகளை ரஷ்ய அதிபர் மாளிகை திட்டவட்டமாக மறுத்துள்ளது. “இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது” என்று கண்டித்துள்ளது.
அண்மையில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றார். அவர் ஜனவரி 6-ம் தேதி அதிபராகப் பொறுப்பேற்றுக் கொள்கிறார். இந்நிலையில், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து அவர் உலகத் தலைவர்கள் பலருடன் பேசி வருகிறார். இதனிடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அவர் தொலைபேசியில் உரையாடியதாகவும், இந்த உரையாடலின்போது உக்ரைன் போரை மேலும் தீவிரப்படுத்த வேண்டாம் என அவர் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியானது. புளோரிடாவில் உள்ள லாகோ எஸ்டேட்டில் இருந்து ட்ரம்ப், தொலைபேசியில் தொடர்பு கொண்டு புதினிடம் பேசியதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.
ஆனா, இந்தச் செய்திகளை ரஷ்ய அதிபர் மாளிகை திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதன் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறும்போது, “இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இது கற்பனையான ஒன்று. இந்த தகவல் தவறானது” என்று தெரிவித்துள்ளார். மேலும், பெஸ்கோவ் தற்போதைய ஊடக அறிக்கையின் தரத்தை விமர்சித்தார். தரம்வாய்ந்த ஊடகங்களில் இருந்தும் இத்தகைய வதந்திகள் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், டொனால்டு ட்ரம்பை தொடர்புகொள்வதற்கான உடனடித் திட்டங்கள் எதுவும் தங்கள் அதிபர் புதினுக்கு இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
பிப்ரவரி 24, 2022-ல் உக்ரைன் மீது ரஷ்யா முதன்முதலில் தாக்குதலைத் தொடங்கியது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை என்று பிரகடனப்படுத்தியே ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியது. ஆனால் இன்றுவரை உக்ரைன் மீது கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. அமெரிக்காவின் ஆயுத உதவி, நிதியுதவி மூலமாகவே தற்போது ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் போரை நடத்தி வருகிறது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதும் உக்ரைனுக்கான ஆயுத உதவி, நிதியுதவியை குறைப்பார் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் உதவி கிடைக்காத சூழலில் உக்ரைன் அரசு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு திரும்பும் என்று ட்ரம்புக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தச் சூழலில் ரஷ்ய அதிபர் புதின் – அமெரிக்க அதிபராகவுள்ள ட்ரம்ப் தொலைபேசி உரையாடல் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது கவனிக்கத்தக்கது. முன்னதாக, தான் வெற்றி பெற்றால் உக்ரைன் – ரஷ்யா போரை 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டு வருவேன் என்று ட்ரம்ப் கூறியிருந்ததும் இப்போது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நோட்டோ நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஏவுகணைகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. இதனை முன்னரே புதின் எச்சரிந்திருந்தார். உக்ரைனுக்கு பின்புலமாக பல்வேறு நாடுகள் செயல்படுகின்றன. சில ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உக்ரைனுக்கு போர் உதவிகளை செய்து வருகிறார்கள். எங்கள் இலக்குகளை அடைய நாங்கள் சிறப்பு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதையும் செய்வோம் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை சுட்டிக்காட்டி பெஸ்கோவ் பேசியுள்ளார்.