அடையாளம் தெரியாத நபர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக, சென்னை காவல் ஆணையரிடம், மேயர் பிரியா புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சென்னை காவல் ஆணையரிடம் ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத் தளங்களில் தன்னை குறித்து அவதூறான தகவல்கள் மற்றும் தவறான பதிவுகள் பரப்பப்படுகிறது.
இதன் மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடைபெறுகிறது. மேலும், சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்ணுக்கும், அடையாளம் தெரியாத நபர்கள் மீண்டும் மீண்டும் தொடர்புகொண்டு தொந்தரவு அளித்து வருகின்றனர்.
இதனால் அலுவலக பணிகளும் பாதிக்கப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேயர் பிரியாவின் புகாரின் அடிப்படையில், சென்னை காவல்துறை முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட பதிவுகள், பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்கள், சமூக வலைத்தள கணக்குகள் மற்றும் அவற்றின் ஐ.பி. முகவரி உள்ளிட்ட தொழில்நுட்ப ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
தேவையானால், இந்த வழக்கு சைபர் க்ரைம் பிரிவு விசாரணைக்கும் மாற்றப்பட்டு, சமூக வலைத்தள நிறுவனங்களிடமிருந்தும் தகவல்கள் பெறப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சி மேயரே அடையாளம் தெரியாத நபர்களின் ஆன்லைன் தொல்லை குறித்து காவல் ஆணையரிடம் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
