சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் குறித்து அவதூறு: தெலுங்கு நடிகர் போசனி கிருஷ்ண முரளி கைது

0
132

பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் போசனி கிருஷ்ண முரளி ஆந்திர போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள நியூ சைன்ஸ் காலனி பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து போசனி கிருஷ்ண முரளியை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் குறித்து கடந்த ஆட்சியின்போது அவதூறாக பேசியதாக ஜன சேனா கட்சி நிர்வாகி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போசனி கிருஷ்ண முரளியை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீஸார் 8 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் விசாரணைக்கு அவர் சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பலரும் காவல் நிலையத்துக்கு வெளியே குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போசனி கிருஷ்ண முரளி, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தீவிர ஆதரவாளராகவும், முந்தைய ஆட்சியின் போது ஆந்திரப் பிரதேச திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் நாடக மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ண முரளி 1990களில் இருந்து தெலுங்கு சினிமாவில் திரைக்கதை எழுத்தாளர், நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வந்தார். நாகார்ஜூனா மற்றும் சிரஞ்சீவி உள்ளிட்ட நடிகர்களின் படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். ராம் கோபால் வர்மாவின் சில படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார். ஏராளமான தெலுங்கு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் கிருஷ்ண முரளி நடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here