உத்தர பிரதேசத்தில் நடந்த கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக சமாஜ்வாதி எம்.பி. மற்றும் எம்எல்ஏ மகன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் கடந்த 19-ம் தேதி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “சம்பல் மாவட்டம் சந்தவுசி நகரில் ஹரிஹர் கோயில் இருந்தது. முகலாயர் காலத்தில் இந்தக் கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு ஷாஹி ஜமா மசூதி கட்டப்பட்டது. இதுகுறித்து ஆய்வு நடத்த வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த மனுவை அன்றைய தினமே விசாரித்த நீதிபதி ஆதித்யா சிங் மசூதியில் அன்றைய தினமே ஆய்வு நடத்த உத்தரவிட்டார். இதற்காக வழக்கறிஞர் ஆணையர் ரமேஷ் ராகவ் தலைமையில் ஒரு குழுவை நியமித்த அவர், வரும் 29-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, அந்தக் குழுவினர் அன்றைய தினமே முதல்கட்ட ஆய்வை தொடங்கினர்.
இந்நிலையில், ஆய்வுக் குழுவினர் இரண்டாவது நாளாக நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொள்வதற்காக ஜமா மசூதிக்கு சென்றனர். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் மசூதியில் ஆய்வு நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் ஆய்வுக் குழுவினரை மசூதிக்குள் அழைத்துச் செல்ல முயன்றனர்.
அப்போது போலீஸார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதுடன் வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். இதையடுத்து, போராட்டக்காரர்களை கலைக்க போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனிடையே, போராட்ட கும்பலைச் சேர்ந்தவர்களே துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வன்முறை சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 20 போலீஸார் உட்பட காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், காயமடைந்தவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இத்துடன் இந்த கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து மொரதாபாத் மண்டல ஆணையர் ஆஞ்சநேய குமார் சிங் கூறும்போது, “இந்த கலவரம் தொடர்பான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். அதில் முகமூடி அணிந்த சிலர் கற்களை வீசி உள்ளனர். உயிரிழந்தவர்கள் அருகில் இருந்தவர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளனர். ஆனால் போலீஸார் தூரத்தில் இருப்பது வீடியோவில் தெரியவந்துள்ளது. எனவே, போராட்டக்காரர்கள்தான் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.
இந்த கலவரம் தொடர்பாக சமாஜ்வாதி எம்.பி. ஜியா-உர்-ரஹ்மான் பர்க் மற்றும் சம்பவத்தின்போது அங்கிருந்த அப்பகுதி எம்எல்ஏ மகன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2 பெண்கள் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகப்படும் நபர்கள் வீட்டில் நடத்திய சோதனையில் ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களை போலீஸார் கைப்பற்றி உள்ளனர்.
இணையதள சேவை துண்டிப்பு: சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வரும் டிசம்பர் 1-ம் தேதி வரை சம்பல் மாவட்டத்துக்குள் நுழைய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் வதந்தி பரவுவதைத் தடுக்க மாவட்டம் முழுவதும் ஒரு நாளைக்கு (நேற்று) இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.