ஸ்பெயினின் டெனெரிஃப் அணிக்காக விளையாடிய கால்பந்து வீரர் ஜெசுஸ் டி மிகுவேல் உயிரிழந்த சம்பவத்தில், எதிரணி கோல் கீப்பரான ஜெசுஸ் ஓவோனோவுக்கு 12 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2-ம் தேதி டெனெரிஃப் அணிக்கும் அன்டோரா அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது. ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் மைதானத்தின் நடுப்பகுதியில் உயரமாக வந்த பந்தை நோக்கி 30 வயதான டி மிகுவேல் ஓடிச் சென்றார். அப்போது, தனது கோல் எல்லையை விட்டு வெகுதூரம் வெளியேறி வந்த அன்டோரா அணியின் கோல் கீப்பர் ஓவோனோ, அவர் மீது வேகமாக மோதினார்.
இந்த மோதலில் நெஞ்சில் பலத்த ஷாக் ஏற்பட்டு டி மிகுவேலுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு, கோல் கீப்பர் ஓவோனோ மோதலில் அளவுக்கு அதிகமான வலிமையைப் பயன்படுத்தியதாகக் கூறி, அவருக்கு 12 போட்டிகள் விளையாடத் தடை விதித்துள்ளது.
இதற்கிடையே, டி மிகுவேலின் மரணம் தொடர்பாக கவனக்குறைவால் ஏற்பட்ட மரணம் என்ற கோணத்தில் ஸ்பெயின் போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இருப்பினும், இந்த விவகாரத்தில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு என அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தால் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஓவோனோவுக்கு ஆதரவாக இருப்பதாக அன்டோரா அணியின் பயிற்சியாளர் கார்லஸ் மான்சோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தச் சம்பவம் ஓவோனோவை மிகவும் பாதித்துள்ளது. மீண்டும் எப்போது விளையாடத் தயாராக இருக்கிறார் என்பதை அவரே முடிவு செய்யட்டும். அதற்கான முழு சுதந்திரத்தையும் அவருக்கு வழங்குவோம்” என்றார்.
மேலும், உயிரிழந்த வீரர் டி மிகுவேலின் குடும்பத்தினருக்கு ஓவோனோ தனது கிளப் மூலமாக இரங்கலையும் தெரிவித்துள்ளார்.














