கிரிக்கெட் என்பது வரவு – செலவு பார்க்கும் இடமல்ல என, இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறினார்.
மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்க 65-வது ஆண்டு விழா கருப்பாயூரணியில் நடந்தது. சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ விருதுபெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பங்கேற்று லீக் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
அவர் பேசியதாவது:- “கிரிக்கெட் ஆடினால் பணம் வரும் என்று நினைக்க கூடாது. கிரிக்கெட் ஆடினால் மகிழ்ச்சி கிடைக்கும் என நினைக்க வேண்டும். அப்படி நினைத்து தான், நான் விளையாடினேன். கிரிக்கெட் விளையாடி ஐபிஎல்லில் நுழைந்து முன்னேற நினைப்பது ஒவ்வொருவரின் நியாயமான கருத்து. கிரிக்கெட் விளையாட வருபவர்கள் வெற்றி பெறுவோம், அடுத்தக்கட்டத்திற்கு செல்வோம் என நினைக்கவேண்டும்.
கிரிக்கெட்டை நம்புங்கள், மகிழ்ச்சி, சந்தோஷம் கிடைக்கும். கிரிக்கெட் விளையாட்டு என்பது வரவு-செலவு கணக்கு பார்க்கும் இடம் அல்ல. அப்படி நீங்கள் நினைத்தால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். கிரிக்கெட்டில் அரசியல் இருக்கிறது என நினைத்தால் அது தவறு. விளையாட்டு ஒன்றே குறிக்கோளாக வைத்து கொள்ள வேண்டும். அப்போது தான் சாதிக்க முடியும்” இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சிஎஸ்கே. அணியின் முதன்மைச் செயல் அதிகாரி விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, சங்க செயலாளர் பழனி, உதவி செயலாளர் பாபா, மதுரை கிரிக்கெட் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து பங்கேற்றனர்.