மும்பை டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பந்த்துக்கு சர்ச்சைக்குரிய வகையில் அவுட் கொடுக்கப்பட்டது.
நேற்றைய இந்திய அணியின் 2-வது இன்னிங்ஸின்போது சிறப்பான முறையில் ரிஷப் பந்த் விளையாடிக் கொண்டிருந்தார். அவர் 57 பந்துகளில் 64 ரன்களில் இருந்தபோது, அஜாஸ் படேல் பந்தை இறங்கி வந்து அடிக்க முயன்றார். அப்போது பந்தை விக்கெட் கீப்பர் டாம் பிளண்டல் கேட்ச் பிடித்தார். நியூஸிலாந்து வீரர்கள் இதற்கு அவுட் கேட்க, கள நடுவர் அவுட் தரமறுத்தார்.
இதையடுத்து டிஆர்எஸ் முறையில் அவுட் கேட்கப்பட்டது. ஆனால் பேட்டில் பந்து படவே இல்லை என ரிஷப் தெரிவித்தார். அப்போது துரதிருஷ்டவசமாக ரிஷப் பந்த் அவுட் என்று 3-வது நடுவரால் அறிவிக்கப்பட்டது. இந்த முடிவு நியூஸிலாந்துக்கு சாதகமாக அமைந்தது.
இதுகுறித்து கேப்டன் ரோஹித் கூறும்போது, “ரிஷப் பந்த்துக்கு சர்ச்சையான முறையில் அவுட் தரப்பட்டது. அவர் ஆட்டமிழந்ததற்கு உறுதியான ஆதாரம் இல்லை என்றால், அதற்கான முடிவை பேட்ஸ்மேனுக்கு சாதகமாக கொடுத்து இருக்க வேண்டும். ரிஷப் பந்த் அவுட் ஆனது போட்டியின் முடிவை மாற்றி அமைத்தது” என்றார்.














