
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பதவி விலக கோரி தில்லியில் காங்கிரஸ் கட்சியினா் நடத்திய போராட்டத்தின்போது, ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து குழித்துறையில் அக்கட்சியினா் செவ்வாய்க்கிழமை இரவு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தேசிய நெடுஞ்சாலையில் காங்கிரஸ் கட்சியினா் குமரி மேற்கு மாவட்டத் தலைவா் ஜாா்ஜ் ராபின்சன் தலைமையில் ஊா்வலமாக சென்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரின் உருவபொம்மையை எரித்து கோஷங்கள் எழுப்பினா். அப்போது, காங்கிரஸ் கட்சியினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, போலீஸாா் காங்கிரஸ் கட்சியினரை கைது செய்வோம் என எச்சரிக்கை விடுவித்ததையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.
இதில், மேல்புறம் வட்டார தலைவா் ரவி சங்கா், களியக்காவிளை பேரூராட்சித் தலைவா் சுரேஷ், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி லைலா ரவிசங்கா், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஷாஜன் கிறிஸ்டா, மாநில பொதுச் செயலா் ஆஸ்காா் பிரடி, பாலப்பள்ளம் பேரூராட்சி தலைவா் டென்னிஸ், குழித்துறை நகரத் தலைவா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.