Home மாநில செய்திகள் சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரியை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரியை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை

0

சென்னை உயர் நீதிமன்றத்தி்ன் புதிய தலைமை நீதிபதியாக கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வரும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரியை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மார்ச் 5-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறவுள்ளார்.

அதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தற்போது கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வரும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சுஷ்ருத் அர்வி்ந்த் தர்மாதிகாரியை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் குடியரசுத் தலைவருக்கும், மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்துள்ளது.

இதற்கிடையே, இனி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்படவுள்ளவர்களை முன்கூட்டியே சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்களுக்கு இடமாற்றம் செய்யவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான கொலீஜியம் கொள்கைரீதியிலான முடிவை எடுத்துள்ளது.

நீதி நிர்வாகத்தின் திறனையும், தரத்தையும் பலப்படுத்தும் வகையில் உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் நீதிபதிகளை, குறைந்தபட்சம் 2 மாதங்களுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளாக இடமாறுதல் செய்ய வேண்டும்.

அதன்மூலம் அவர்கள் தலைமை நீதிபதியாக பதவியேற்கும் முன்பாக சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களின் அன்றாட நடைமுறைகளை அறிந்து அதற்கேற்ப செயல்பட முடியும் என்று கூறப்பட்டது.

அதன்படி ஹரியானா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றும் லிஸா கில்லை, ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்துக்கு முன்கூட்டியே இடமாறுதல் செய்யவும், தலைமை நீதிபதி பதவி காலியான பிறகு அவரை அப்பதவியில் நியமிக்கவும் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version