விஜய் முதல்வராகப் பதவியேற்றதால் நீரில் மிதந்து ஆசனம் செய்து தவெக எம்எல்ஏ கருப்பையா நேர்த்திக்கடன் செலுத்தினார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வென்றவர் எம்.வீ.கருப்பையா. சட்டப்பேரவைத் தேர்தலின்போது தவெக வெற்றிபெற்று விஜய் முதல்வராக வேண்டும் என சோழவந்தான் ஜெனகை மாரியம்மனுக்கு அவர் வேண்டுதல் வைத்திருந்தார். இதன்படி விஜய் முதல்வராக பதவியேற்றார்.
இந்நிலையில் நேற்று ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றம் நடந்த நிலையில், நகரி சாலையில் ஆலங்கொட்டாரத்திலுள்ள கிணற்று நீரில் தவெக கொடியுடன் கருப்பையா எம்எல்ஏ மிதந்து 3 மணி நேரம் ஆசனம் செய்தார். கட்சி நிர்வாகிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். ஏற்கெனவே அதிமுகவில் எம்எல்ஏவாக இருந்த கருப்பையா, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் நீண்டநேரம் நீரில் மிதந்து சாதனை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
