சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 4 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள், மாவட்ட நிர்வாகிகள் என 10 ஆயிரம் பேர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்எஸ்எம். ஆனந்தன், எஸ்.வளர்மதி ஆகியோர் தவெகவில் இணைந்தனர்.
இதற்கான இணைப்பு விழா மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது. அமைச்சரும், கட்சியின் பொதுச் செயலாளருமான என்.ஆனந்த், தவெக கட்சித் துண்டை அணிவித்து அவர்களை வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் மான்ராஜ், எம்.ராம்குமார், ராஜவர்மன், சதன் பிரபாகர், திருஞானசம்பந்தன், சுந்தர்ராஜன், ராமச்சந்திரன், பி.கே.வைரமுத்து, தமிழ்ச்செல்வன் உட்பட தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூரின் முன்னாள் மாவட்டச் செயலாளர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பேசியதாவது:
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்: தேர்தலுக்கு முன்பாகவே, தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று பழனிசாமியிடம் கடுமையாக வலியுறுத்தினோம். ஆனால், தலைமை கேட்கவில்லை. மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத அதிமுக தலைமை, இயக்கத்தின் கொள்கைக்கு முரணாக, ‘தீயசக்தி’ என்றுநாம் அழைக்கும் திமுகவுடன் கூட்டு வைத்து ஆட்சி அமைக்க முயன்றது.
அதில் எங்களுக்கு சிறிதும் உடன்பாடு இல்லை. தமிழக மக்களின் கனவுக்கு இப்போதுதான் ஒரு தெளிவான பாதை கிடைத்துள்ளது. இனி தவெக வேறு, தமிழகம் வேறு அல்ல. வரவிருக்கும் அனைத்து தேர்தல்களிலும் தவெகதான் வெற்றி பெறும்.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்: திமுகவை ஒழிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துக்காக தொடங்கப்பட்டது அதிமுக. பழனிசாமியின் தவறான முடிவுகளால் அதிமுக தள்ளாடி வருகிறது. தலைமைசரியான முடிவு எடுக்கத் தவறினால் இயக்கம் என்ன ஆகும் என்பதற்கு அதிமுகவே சாட்சி.
அமைச்சர் ஆனந்த்: அதிமுகவில் இருந்து விலகி எங்களுடன் இணைந்துள்ள உங்களுக்கு தவெகவில் மிகச் சிறப்பான மரியாதை கிடைக்கும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் நாம் அனைத்து இடங்களிலும் வெற்றிபெற வேண்டும். முதல்வர் விஜய் ஜூலை 10-ம் தேதி கரூர் மாவட்டத்துக்குச் செல்ல உள்ளார். அதைத் தொடர்ந்து, பல மாவட்டங்களிலும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: தவெக ஆட்சியைக் கவிழ்க்க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சூழ்ச்சி செய்து வருகிறார். கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கப் பார்க்கின்றனர். இந்த ஆட்சியைக் கவிழ்க்க முயன்றால் மொத்த தமிழகமும் திமுகவுக்கு எதிராகத் திரும்பும்.
அமைச்சர் செங்கோட்டையன்: அதிமுகவில் துரோகம் இருக்கிறது, தவெகவில் துரோகம் இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா நடத்தியது உண்மையான மக்கள் இயக்கம். பழனிசாமி நடத்துவது கார்ப்பரேட் நிறுவனம். அதிமுகவை தற்போது ‘சனி’ பிடித்திருக்கிறது. தவெகவில் ‘குரு’ இருக்கிறது. இவ்வாறு அவர்கள் பேசினர்.
