தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு பயிற்சி துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் ரூ.27.33 கோடியில் கட்டப்பட்ட அலுவலகங்கள், மாணவர் விடுதி உள்ளிட்ட புதிய கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறை சார்பில் விழுப்புரம் மாவட்டம் வி.மருதூரில் ரூ.3.71 கோடியிலும், ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் கிராமத்தில் ரூ.4.42 கோடியிலும் ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத் துறை அலுவலக வளாக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
அரசு ஐடிஐ அலுவலக கட்டிடம்: அதேபோல, வேலைவாய்ப்பு பயிற்சி துறை சார்பில் சேலம், புதுக்கோட்டை மாவட்டம் – விராலிமலை, சென்னை – வண்ணாரப்பேட்டை, தஞ்சாவூர் – ஒரத்தநாடு, கிருஷ்ணகிரி – தேன்கனி்க்கோட்டை ஆகிய இடங்களில் ரூ.19.20 கோடியில் அரசு ஐடிஐ அலுவலக கட்டிடம், மாணவர் தங்கும் விடுதி, புதிய தொழிற்பிரிவு கட்டிடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.
இவ்வாறு மொத்தம் ரூ.27.33 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலியில் திறந்து வைத்தார்.
அமைச்சர்கள் பங்கேற்பு: வனத் துறை அமைச்சர் பொன்முடி, தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், தொழிலாளர் நல ஆணையர் அதுல் ஆனந்த், தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறை செயலர் கொ.வீரராகவ ராவ், வேலைவாய்ப்பு, பயிற்சி துறை இயக்குநர் பா.விஷ்ணு சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.