கிண்டி கத்திப்பாராவில் நடைபெற்று வரும் மெட்ரோ கட்டுமான பணிகளை முதல்வர் ஆய்வு

0
183

கிண்டி கத்திப்பாராவில், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தட மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் நடைபெறுகிறது. இவற்றில் மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில் சென்னை கிண்டி கத்திப்பாரா பகுதியில் நடைபெறும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுதவிர மாதவரம் – சிறுசேரி வரையிலான 3-வது வழித்தட கட்டுமானத்தின் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார்.

ஆய்வின் போது, முதல்வர் ஸ்டாலின் மின்தூக்கி மூலம் உயரே சென்று, உயரத்திலிருந்து கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார். கத்திப்பாரா பகுதியில் ஏற்கெனவே முதல், இரண்டாவது வழித்தடம் அமைந்துள்ளது. கத்திப்பாரா மேம்பாலம் உள்ளடக்கிய சந்திப்பில் சமச்சீர் காண்டிலீவர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதில் உள்ள சவால்கள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் (திட்டங்கள்) அர்ச்சுனன், முதல்வருக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

5-வது வழித்தடம், பட் சாலையை கடந்த பின் கத்திப்பாராவை சென்றடைந்து, பின்னர் உள்வட்ட சாலை வழியாக மேடவாக்கம் பிரதான சாலையை அடைகிறது. கத்திப்பாரா பகுதியில் நெடுஞ்சாலை துறையின் மேம்பாலம், 1 மற்றும் 2-வது மெட்ரோ வழித்தடம் அமையப் பெற்றுள்ளமையால், சமச்சீர் காண்டிலீவர் எனப்படும் கட்டமைப்பின் கீழ் சாரக்கட்டு அமைப்புகள் ஏற்படுத்தாமல் கட்டுமானத்தை செயல்படுத்தும் ஒரு சிறப்பு கட்டுமான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. கத்திப்பாரா பகுதியில் 125 மீட்டர் ஆரம் வளைவுடன் 5 தொடச்சியான சமச்சீர் காண்டிலீவர் முறை (Balance Cantilever Method) ஸ்பான்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளன.

தண்டவாளங்கள் தரை மட்டத்திலிருந்து 31 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகின்றன. பின்னர் அவை சுரங்கப்பாதை வழியாக தரையை அடைந்து, அங்கிருந்து கத்திப்பாரா மேம்பாலம், 1, 2-வது மெட்ரோ வழித்தடம் வழியே செல்கிறது. மொத்த சமச்சீர் காண்டிலீவர் முறையின் நீளம் 413 மீட்டர் ஆகும். மொத்தம் 6 தூண்கள் மற்றும் 10 தூண்கள் இடையிலான கூறுகள் கொண்டதாகும். இதுவரை 80 கூறுகளில் 30 கூறுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு டிசம்பருக்குள் ஆலந்தூர் வரையிலான வழித்தடப் பகுதி முடிவடையும் என கணக்கிடப்பட்டுள்ளது.

சமச்சீர் கான்டிலீவர் முறை என்பது ஒரு பால கட்டுமான நுட்பமாகும். இதில் மேல்கட்டமைப்பு பாலத்தின் தளத்தின் கீழ் தரை ஆதரவு இல்லாமல், சமச்சீர், எதிரெதிர் கான்டிலீவர்களில் தூண்களிலிருந்து வெளிப்புறமாக கட்டமைக்கப்படுகிறது.

இந்த ஆய்வின்போது, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here