செழியன்: உலக சினிமாவை ஊர்தோறும் உச்சரிக்க வைத்தவர் | அஞ்சலி

0
24

போதிய கவனம் பெறாத, அதே​நேரம் அதைப் பற்றி சற்​றும் கவலைப்​ப​டா​மல், தான் தேர்ந்​தெடுத்த துறை​யில் உழைத்​துக் கொண்​டிருந்​தவர்​களில் ஒரு​வர் ஒளிப்​ப​தி​வாளர் ​- இயக்​குநர் செழியன்.

திரைபடக் கலை, ஒளிப்​படக் கலை, இசை, எழுத்து எனப் பன்​முகத் திறமை வாய்ந்​தவர். கடந்த மே மாதம் ஒரு திரை​யிடலுக்​குச் சென்றிருந்​த​போது, நெடு நாள் கழித்து அவரை சந்​தித்​துப் பேசும் வாய்ப்பு கிடைத்​தது. 2 மாதங்​கள் கூடக் கடந்​தி​ராத நிலை​யில் நேற்று அவர் கால​மாகி​விட்​ட​தாக செய்தி வந்​தது.

உலக சினிமா திரைப்​படம் என்​பது ரசிக்க எளி​தானது, ஆனால் அதன் நுட்​பங்​களைப் புரிந்​து​கொள்​வது கடினம் என்று கூறப்​படும் நிலை​யில், ஒரு கலையை நெருங்​கிப் புரிந்​து​கொள்ள முயன்​றால், அதன் அடி​நாதத்​தைப் பிடித்​து​விட முடிந்​தால் எல்லா கலை​யும் வசப்​படும்.

கலைக்கு பிரம்​மாண்​டங்​கள் தேவையில்​லை, கதை​யும் அதை சிறப்​பாக வெளிப்​படுத்​தும் கலைக் கூறுகளை​யும் ஒரு​வர் வளர்த்தெடுத்​துக் கொண்​டால் போதும் என்​கிற நம்​பிக்​கை​யைப் பரவலாக விதைத்​தவர்​களில் ஒரு​வர் செழியன்.

திரைப்பட ரசனையை வெகுமக்​களிடம் எடுத்​துச்​சென்​றவர்​களில் குறிப்​பிடத்​தக்​கவர். உலக சினிமா என்​பது திரைப்பட சங்​கங்​கள் போன்ற சிறு குழுக்​களி​லும் சிற்​றிதழ்​களி​லும் மட்​டும் பேசப்​பட்​டு, விவா​திக்​கப்​பட்​டுக் கொண்​டிருந்த காலத்​தில் தமிழ்​நாட்​டின் மூலை முடுக்​கெல்​லாம் பேச​வைத்​தவர்.

ஒரு லட்​சம் பிர​தி​களுக்கு மேல் விற்ற நூல், அவரது ‘உலக சினி​மா’. சினி​மாவை​யும் நாயகர்​களை​யும் வழிபடக் கூடிய​வர்​களாகக் கருதும் நம் மண்​ணில், மாறு​பட்ட கதைகளை​யும் அவற்​றினுள் உட்பொ​திந்து வைக்​கப்​பட்​டுள்ள கருத்​துகளை​யும் செழியன் கவனப்​படுத்​தி​னார். எல்​லைகளைக் கடந்த மனித உணர்​வு​களைக் கடத்​தும் அந்​தத் திரைப்​படங்​களின் சிறப்பை பரவலாக்​கி​னார்.

எழுத்​துத் திறன்:

அமை​தி​யான சுபாவம் கொண்​ட​வர். எப்​போதும் ஒரு மெல்​லிய புன்னகை​யுடன் வரவேற்​பவர், பேசுபவர். தொடர்ந்து இயங்​கிக் கொண்டே இருந்​தவர். காட்சி ஊடகம் சார்ந்து இயங்​குபவர்​கள் சிறந்த எழுத்​தாளர்​களாக இருப்​பது பொது​வாக அரிது. தொடர் வாசிப்​பு, சிறுகதை – க​விதை எழுதுதல் என வலு​வான அடித்தளத்தை செழியன் கொண்​டிருந்​தார்.

மிக​வும் கடினமான​தாகக் கருதப்​படும் மேற்​கத்​திய இசையை கற்பதற்​கான ‘த மியூசிக் ஸ்கூல்’ கையேடு​கள் தொகுப்பை வெளியிட்​ட​வர். ஒரு​புறம் ‘கல்​லூரி’, ‘ரெட்​டைச்​சுழி’, ‘தென்​மேற்கு பரு​வக்​காற்​று’, ‘பரதேசி’, ‘ஜோக்​கர்’ போன்ற சினி​மாக்​களுக்கு ஒளிப்ப​திவு செய்​தவர், மற்​றொரு​புறம் செலவு குறைந்த, கலை சார்ந்த திரைப்​படங்​கள் என இரட்​டைக் குதிரைகளில் பயணித்​தார்.

கொண்​டாடப்​ப​டாதவர்:

தனது ‘த பிலிம் ஸ்கூல்’ மூலம் சுயாதீனத் திரைப்​படங்​களை எடுப்பது தொடர்​பாக, திட்​ட​வட்​ட​மான பயிற்​சியை உரு​வாக்​கி, அதற்​கான மாணவர்​களைத் திரட்​டித் தீவிர​மாக உழைத்​துக் கொண்டிருந்​தார். நிறு​வனங்​கள் செய்​ய​வேண்​டிய பணியை தனிநபராகச் செய்​தார்.

பல்​வேறு வகை​களில் தமிழ்த் திரைத் துறை​யில் இயங்​கிய​வ​ராக இருந்​தும், போதிய வெளிச்​சம் படாதவர். ஒரு​வகை​யில் அவர் தனித்​தன்​மை​யுடன் இயங்​கு​வதற்கு அது காரண​மாக இருந்​தது என்று கூறலாம். அதே​நேரம், ஆத்​மார்த்​தத்​துடன் இயங்​கும் திறமை​யாளர்​களை நம் சமூகம் பெரி​தாகக் கொண்​டாடுவதில்​லை.

அவருடைய எழுத்​தோ, திரை முயற்​சியோ இனிமேல் வரப்போவதில்லை என்​பது ஒரு​புறம் இருந்​தா​லும், இனிய சுபாவம் கொண்ட ரசனை​யாளர், சக மனிதர்​களிடம் ஏற்​படுத்​தி​யுள்ள வெறுமையை நிச்​சய​மாக நிரப்​பி​விடவே முடி​யாது. புற்​று​நோ​யால் பாதிக்​கப்​பட்​டிருந்த செழியன் சிகிச்சை பலனின்றி நேற்​று​ காலை கால​மா​னார்.

நாம் தமிழர் கட்​சி​யின் கலை இலக்​கிய பண்​பாட்​டுப் பாசறை​யின் மாநில ஒருங்​கிணைப்​பாள​ரான, ஒளிப்பதிவாளர் செழியனின் உடல் நாம் தமிழர் கட்​சித் தலைமை அலு​வல​கத்​தில், அஞ்சலிக்காக வைக்​கப்​பட்​டது. அங்கு திரைத்​துறை​யினர், பொது​மக்​கள் அஞ்​சலி செலுத்​தினர். பின்​னர் போரூர் மின் மயானத்​தில் நேற்று மாலை அவர் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்​யப்​பட்​டது. மறைந்​த செழியனுக்​கு பிரே​மா என்​ற மனை​வி, அஜி​தா என்​ற மகள்​ உள்​ளனர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here