டிஎன்பிஎல் டி20 தொடரில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டிஎன்பிஎல் டி20 தொடரில் நேற்று திண்டுக்கலில் நடைபெற்ற ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் – சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சேலம் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹரிஷ் குமார் 35 பந்துகளில், 6 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 57 ரன்களும், ஈஸ்வர் 20 பந்துகளில், 5 சிக்ஸர்களுடன் 39 ரன்களும் விளாசினர்.
பூபதி குமார் 30, ராஜேந்திரன் விவேக் 21, ஹரி நிஷாந்த் 18 ரன்கள் சேர்த்தனர். சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி சார்பில் பிரேம் குமார், சிலம்பரசன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
183 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 16.4 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் நாராயண் ஜெகதீசன் 39 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 78 ரன்களும், சுவப்னில் சிங் 26 பந்துகளில், 5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 45 ரன்களும் விளாசினர்.
சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி 4 ஆட்டங்களில் விளையாடி தலா 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 4 புள்ளிகளை பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. சேலம் அணிக்கு இது தொடர்ச்சியான 4-வது தோல்வியாக அமைந்தது. அந்த அணி நடப்பு தொடரில் இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்கவில்லை.
