சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் மோந்தா புயல் காரணமாக மழை பெய்ததால் மைதானத்தில் உள்ள அனைத்து ஆடுகளங்களிலும் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக முதல் நாளில் நடைபெற இருந்த அனைத்து ஆட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டன. இந்த ஆட்டங்கள் 2-வது நாளான நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
போட்டிகளை பகல் 12 மணிக்கு தொடங்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தொடர் மழையால் ஆடுகளங்களில் தண்ணீர் தேங்கியதால் திட்டமிட்டபடி ஆட்டங்களை நடத்த முடியவில்லை. இதைத் தொடர்ந்து பிற்பகல் 2.30 மணிக்கு போட்டிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கும் வழியில்லாமல் போனது. முடிவில் 2-வது நாளிலும் எந்தவித ஆட்டங்களும் நடைபெறவில்லை.
இதையடுத்து 3-வது நாளான இன்று போட்டிகள் தொடங்கும் எனவும், பகல் 11 மணி முதல் ஆட்டங்கள் நடத்தப்படும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒற்றையர் பிரிவுடன், இரட்டையர் பிரிவு ஆட்டங்களும் இன்று முதல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.














