மாநில அரசுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வரை கூடுதல் நிதிச்சுமை ஏற்படுவதால், விபி-ஜிராம்ஜி திட்டத்தில் ஊதியம், நிர்வாக செலவுகளுக்கான மத்திய அரசின் 100% நிதி தொடர்வது உள்ளிட்ட மாற்றங்களை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
நாடு முழுவதும் கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தரும் வகையில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வந்தது. இதற்கு மாற்றாக, சில மாறுதல்களுடன் வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டம் (விபி-ஜி ராம் ஜி) என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்மூலம் 125 நாட்கள் வேலை கிடைக்கும். இந்த திட்டம் தமிழ கம் உட்பட நாடு முழுவதும் நேற்று அமலுக்கு வந்துள்ளது.
இந்த திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த ரூ.12,642 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்களிப்புத் தொகை ரூ.7,585 கோடி ஆகும்.
இந்நிலையில், இத்திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அதில் முதல்வர் கூறியுள்ளதாவது:
விபி-ஜிராம்ஜி திட்டத்தின் நிதிப் பகிர்வு முறை மற்றும் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள், மாநில அரசுக்கு ரூ.5 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கூடுதல் நிதிச் சுமையையும், செயல்பாட்டு ரீதியான தாக்கங்களையும் ஏற்படுத்தும். இருந்தாலும், இத்திட்ட விதிகளில் முக்கிய மாற்றங்கள், தளர்வுகள் அவசியமாகின்றன. அவ்வாறு செய்யாவிட்டால், திட்டத்தை கள அளவில் தடையின்றி, திறம்பட செயல்படுத்துவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தைச் சார்ந்துள்ள கிராமப்புற மக்களையும் இது பாதிக்கும்.
மேலும், நிதிப் பகிர்வு முறையைப் பொருத்தவரை, தற்போதைய வழிகாட்டுதல்களின்படி ஊதியம், கட்டுமானப் பொருட்கள், நிர்வாகச் செலவுகள் ஆகிய அனைத்துக்கும் மத்திய, மாநில அரசுகள் இடையே 60:40 என்ற வீதத்தை கட்டாயமாக்குகின்றன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கடந்த 2 தசாப்தங்களாக வேறுபட்ட ஒரு கட்டமைப்பின் கீழ் செயல்பட்டு வந்த நிலையில், இந்த மாற்றம் மாநில கருவூலத்துக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது.
இதனால், ஊதியம், வேலை நாட்கள் குறைய வாய்ப்புள்ளது. பிற அத்தியாவசிய நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும் குறையக்கூடும். எனவே, ஊதிய, நிர்வாகச் செலவுகளைப் பொருத்தவரையில் மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவி தொடர வேண்டும். கட்டுமானப் பொருட்கள் கூறுகளை மத்திய, மாநில அரசுகள் இடையே 75:25 என்ற வீதத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
இத்திட்டத்தில் கிராம ஊராட்சிகளை வகைப்படுத்தவும், மாநில அளவிலான நிதி ஒதுக்கீட்டைப் பகிர்ந்தளிக்கவும் முன்மொழிந்துள்ள மத்திய அளவிலான வழிமுறைகளில், மிக நுட்பமான நிர்வாக மேலாண்மையைக் கொண்டு வருவதுடன், நாடு முழுமைக்கும் ஒரேமாதிரியான கணக்கீடு அடிப்படையிலான அணுகுமுறை என்பது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் உள்ளூர் மற்றும் கள அளவிலான தேவைகளின் அடிப்படையில், நிதிப் பகிர்வுக்கென தனிப்பட்ட வழிமுறையை உருவாக்க மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
இச்சட்டம், ஒவ்வொரு நிதி ஆண்டிலும் முதன்மை விதைப்பு மற்றும் அறுவடைக் காலங்களை உள்ளடக்கிய 60 நாட்களை மாநில அரசு நிலையானதாக அறிவிக்க வேண்டும். அந்த காலகட்டத்தில் பணிகள் தற்காலிகமாக நிறுத்துவதை கட்டாயமாக்க வேண்டும். ‘எல் நினோ’ போன்ற எதிர்பாராத காலங்களில் உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப இந்த 60 நாட்கள் முதன்மைப் பருவத்தை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே மாற்றி அறிவிப்பதற்கான அதிகாரத்தை பரவலாக்க வேண்டும்.
விபி- ஜிராம்ஜி கட்டமைப்பின் கீழ் மாநில வீட்டுவசதித் திட்டங்களையும் சேர்த்து, இந்நலத்திட்ட இலக்குகளை கணிசமாக விரைவுபடுத்தி, அனைவருக்கும் வீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதில் ஒவ்வொரு மத்திய, மாநில அல்லது உள்ளூர் திட்டங்களும் மத்திய அரசால் தனித்தனியாக அறிவிக்கப்பட வேண்டும். திட்டங்களை ஒருங்கிணைக்கும் அறிவிப்பு மற்றும் ஒப்புதல் அளிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே வழங்குவது, மிகவும் பயனுள்ளதாக அமையும்.
மகாத்மா காந்தியின் மாண்பைப் போற்றும் வகையில், அவரது பெயரிலேயே இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
ஊரக வேலை உறுதித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் தொடர்ந்து தேசிய அளவில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. இந்த முக்கிய மாற்றங்களுடன், இத்திட்டத்தை மேலும் சிறப்பாக தொலைநோக்குடன், அதிகளவு உள்ளூர் மக்கள் பயன்பெறும் வகையிலும், கிராமப்புற மேம்பாட்டில் தீவிர கவனத்துடனும் செயல்படுத்த முடியும். இந்த முன்மொழிவுகளை பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
