செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் ‘டீப் பேக்’ போலி பதிவுகளைத் தடுக்க, தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ல் செய்யப்பட்ட புதிய திருத்தத்தின்படி, பாலியல் மற்றும் ஆபாச பதிவுகளை அகற்ற சமூக ஊடகங்களுக்கு இருந்த காலக்கெடுவை 24 மணி நேரத்திலிருந்து 2 மணி நேரமாகக் குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசு அல்லது நீதிமன்ற உத்தரவுப்படி சட்டவிரோத மற்றும் சர்ச்சைக்குரிய பதிவுகளை அகற்ற இருந்த காலக்கெடு 36 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாகவும், பயனர்களின் புகார்களைத் தீர்க்கும் அவகாசம் 72 மணி நேரத்தில் இருந்து 36 மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஆபாசம் மற்றும் ஆள்மாறாட்டம் போன்ற உணர்வுபூர்வமான விவகாரங்கள் தொடர்பான புகார்கள் மீது 2 மணி நேரத்திற்குள்ளாக நடவடிக்கை எடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விதிகளைப் பின்பற்றத் தவறினால், தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் பிரிவு 79-ன் கீழ் மூன்றாம் தரப்பு பதிவுகளுக்கு வழங்கப்படும் சட்டப் பாதுகாப்பு விலக்கைக் குறிப்பிட்ட தளங்கள் இழக்க நேரிடும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
