‘நாயகன்’ படத்துக்குப் பிறகு கமல்ஹாசன்-மணிரத்னம் இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில், சிலம்பரசன் டி.ஆர், த்ரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், அபிராமி உள்பட பலர் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ஆர்.மகேந்திரன் மற்றும் சிவா ஆனந்த் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் ஜூன் 5- ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் ‘ஜிங்குச்சா’ என்ற முதல் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.
அப்போது நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது: எனக்கும் இயக்குநர் மணிரத்னத்துக்கும் இடையில் எதுவும் மாறவில்லை. ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்துகொண்டு நிறைய பேசியிருக்கிறோம். அதில் ஒன்று ‘நாயகன்’, இன்னொன்று ‘தக் லைஃப்’ ஆகி இருக்கிறது. இப்போது மீண்டும் இணைந்திருப்பதற்கு மக்கள்தான் காரணம். அவர்களிடம் இருந்து தீர்ப்பு வந்துவிட்டால் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் என அனைவரும் தலைவணங்கி விடுவார்கள். புதிய நட்சத்திரங்கள் உருவாவது அப்படித்தானே. அப்படித்தான் எஸ்.டி.ஆர் வந்து கலக்கிக் கொண்டிருக்கிறார். நானும் ரஜினியும், போஸ்டரில் இருந்த இடத்தில், அப்படித்தானே அவர் தந்தை டி.ராஜேந்தர் வந்து கலக்கினார். அதற்கு காரணம் மக்கள்தான். இப்போது நாங்கள் படம் பண்ணுவதற் கும் நீங்கள்தான் காரணம். நாங்கள் இன்னும் நல்ல படம் பண்ணலாம் என்று பேசி பேசியே இத்தனை வருடங்களாகச் சேர்ந்து படம் பண்ணாமல் இருந்து விட்டோம்.
அஞ்சரை மணிரத்னம்: மணிரத்னத்துக்கு நான் ஒரு பெயர் வைத்திருக்கிறேன், அது கோபத்தில் வைத்த பெயர்தான். அவர் வெறும் மணிரத்னம் இல்லை, ‘அஞ்சரை மணிரத்னம்’. படப்பிடிப்புக்கு ஐந்தரை மணிக்கே அவர் வந்துவிடுவார். ‘நாயகன்’ காலத்தில் இருந்தே அவருக்குத் தொடரும் பழக்கம் அது. பொதுவாக எனக்கு பட்டம் எல்லாம் கொடுப்பார்கள். நான் இந்தப் பட்டத்தை அவருக்கு அளிக்கிறேன்.
இரவெல்லாம் படப்பிடிப்பு பற்றியே யோசித்துக் கொண்டிருந்தால்தான் ஐந்தரை மணிக்கு வர முடியும். படப்பிடிப்பிலும் அவரிடம் சினிமா பற்றி பேசினால்தான் தொடர முடியும். ஒரு பெரிய நடிகர், புதிதாக வந்தஒரு நடிகரை வாழ்த்தியிருக்கிறார், ‘சும்மா பயப்படாம நல்லா நடிங்க’ என்று. அதற்கு அந்தபுது நடிகர் ‘நீங்களும் சார், சின்ன பையன்தானேன்னு கவனமில்லாம இருந்திடாதீங்க’ என்று சொன்னாராம். யார் சொன்னார் என்கிற பெயர் வேண்டாம். அப்படிப்பட்டவர்கள் இருக்கிற இந்த துறையில், எதைக் கண்டும் மலைத்துவிட கூடாது.
மணிரத்னம் முதல் முறையாக, எங்கள் ராஜ்கமல் நிறுவனத்துக்கு படம் செய்திருக்கிறார். இதில் எல்லாம் இருக்கிறது. ஆனால், வேறு மாதிரி இருக்கும். எடுத்த சினிமாவையே எடுத்துக் கொண்டிருக்க முடியுமா? நீங்களும் பார்த்த சினிமாவையே பார்த்துக் கொண்டு இருப்பீர்களா? இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
            













